மொபைல் கோபுரம் அமைக்க சிங்கை எம்.எல்.ஏ., எதிர்ப்பு
கோவை; சிங்காநல்லுார் ஸ்ரீபதி நகரில் மொபைல் கோபுரம் அமைப்பதை, உடனடியாக கைவிட வேண்டும் என்று, சிங்கை தொகுதி எம்.எல்.ஏ.,ஜெயராமன் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:சிங்காநல்லுார் ஸ்ரீபதி நகர் மூன்றாவது வீதியில் வசிக்கும் ஒருவர், தனது வீட்டின் மேல் தளத்தில், 65 அடி உயரத்துக்கு இரும்பால் ஆன, மொபைல் கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டார். மொபைல் கோபுரம் அமைக்கும் வீடு, மாநகராட்சியின் கட்டட அமைப்பு விதிகளுக்கு புறம்பானது. மொபைல் கோபுரம் அமைக்கும் போது, எதிர்பாராமல் விபத்து ஏற்படும் பட்சத்தில் அங்கு வசிப்போருக்கு பாதிப்பு ஏற்படும். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர், களஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஸ்ரீபதி நகரில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, மொபைல் கோபுரம் அப்பகுதியில் அமைக்க வேண்டாம். அதற்கு கலெக்டர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் வலியுறுத்தியுள்ளார்.