கழிவுநீர் சுத்திகரிப்பில் சிறுதுளி தொடர் பணி; பெருவெள்ளமாக மாற மக்கள் பங்களிப்பு அவசியம்
கோவை; கோவை 'சிறுதுளி' வாயிலாக, வெள்ளக்கிணறு தெற்குச்சோலை குட்டையில், 'பயோ ரெமிடியேஷன்' தொழில்நுட்பம் வாயிலாக, கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகள் இன்று துவங்க உள்ளன.கோவை மாவட்டத்தில் உள்ள, நீர் நிலைகளை மீட்டெடுப்பது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது, பொதுமக்கள், மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பசுமை கோவையை உருவாக்கும் முயற்சிகளில், 'சிறுதுளி' அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, 'நல்ல தண்ணி' என்ற திட்டம் துவங்கி செயல்படுத்தி வருகிறது. சுண்டபாளையம் பெரியபள்ளத்தில், வெட்டிவேர் பயன்படுத்தி கழிவுநீர் சுத்திகரிக்கும் முறையை ஆய்வு செய்து, நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.,'பைகோ ரெமிடியேஷன்' என்ற தொழில்நுட்பம், கோவை மாநகராட்சியின் 14வது வார்டில் உள்ள உருமாண்டபாளையம் குட்டையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தினமும், 8.5 லட்சம் லிட்டர் கழிவுநீர், இக்குட்டைக்கு வரும் நிலையில், சில மாதங்களுக்கு முன், பணி துவங்கப்பட்டது.நீர் சுத்திகரிப்புக்கு பின், அதன் தரம் குறித்து தெரிந்து தரச்சான்றிதழ் பெற, பாலக்காட்டில் உள்ள ஐ.ஐ. டி.,க்கு மாதிரி அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து மாதம் ஒரு முறை, தரச்சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.அடுத்தகட்டமாக, இன்று 14வது வார்டில் உள்ள வெள்ளக்கிணறு தெற்குச்சோலை குட்டையில் 'பயோ ரெமிடியேஷன்' முறையில், கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளன.
நீர் கொடுக்க வேண்டும்'
நிருபர்கள் சந்திப்பில், 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறியதாவது:கோவையில் உள்ள குளங்கள் மற்றும் குட்டைகளில், கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்து நல்ல தண்ணீராக மாற்றி, குளங்களில் தேக்கினால், நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். சுத்திகரிக்கப்படும் கழிவு நீரை தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணிகளுக்கு மறு உபயோகத்துக்கு பயன்படுத்தினால், நிலத்தடியிலிருந்து எடுக்கும் நீரின் அளவு குறையும்.எங்களின் பணிக்கு, அரசும், கோவை மாநகராட்சியும் ஊக்கம் கொடுத்து வருகின்றன. நிலத்தடியிலிருந்து நீர் எடுத்துக் கொண்டே இருக்கிறோம். நிலத்தடிக்கு மீண்டும் கொடுக்க வேண்டும். இதற்கு, பொதுமக்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.