உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புகையில்லா போகி விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் உறுதியேற்பு

புகையில்லா போகி விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் உறுதியேற்பு

ஆனைமலை; ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளியில் புகையில்லா போகி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில், புகையில்லா போகி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தலைமை ஆசிரியர் கிட்டுச்சாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பூவிழி, அறிவியல் ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, சோபனா ஆகியோர் பேசினர்.ஆசிரியர்கள் பேசியதாவது:பொங்கலுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில், போகி பண்டிகை கொண்டாடி வருகிறோம். வீடுகளில் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப்கள், பழைய துணிகள், மரப்பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால், உருவாகும் நச்சுப்புகைகள், மனிதன், விலங்குகள், பறவைகள், நிலம், நீர், காற்று மண்டலம் மிகவும் பாதிக்கப்படுகிறது. மேலும், இவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படும். எனவே, இதுபோன்று செய்வதை தவிர்த்து, தேவையற்ற கழிவு பொருட்களை பிரித்து மறு சுழற்ச்சிக்கு அனுப்பி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.அதிக புகை போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டுநர்களுக்கு கேடு விளைவிப்பதாகவும் உள்ளது. எனவே, இந்த நிலையை மாற்ற, காற்று மாசு படாத அளவுக்கு பண்டிகை கொண்டாடலாம். இதன் வாயிலாக சுற்றுச்சூழல் மற்றும் ஓசோன் பாதிப்படைவது மிகவும் குறைகிறது.மேலும், தேவையற்ற பொருட்களை தேவைப்படுவோருக்கு வழங்குவதன் மூலமும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். இவ்வாறு, அவர்கள் பேசினர்.புகையில்லா போகி குறித்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை