உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலைத்தொடரில் தென்மேற்கு பருவமழை சீசன் துவக்கம்! தொகுப்பு அணைகளுக்கு வரத்து அதிகரிப்பு

மலைத்தொடரில் தென்மேற்கு பருவமழை சீசன் துவக்கம்! தொகுப்பு அணைகளுக்கு வரத்து அதிகரிப்பு

பொள்ளாச்சி : தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் அதிகரித்து, பி.ஏ.பி., தொகுப்பு அணைகளுக்கான நீர் வரத்தும் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வால்பாறையில் கடந்த, இரு வாரங்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால், நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.அவ்வகையில், சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில், நேற்று காலை, 86.20 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. ஒரே நாளில், 13 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.அணைக்கு வினாடிக்கு, 4,490.97 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. இங்கு, 122 மி.மீ., அளவில் மழையளவு பதிவாகியுள்ளது.மேலும், தொடர் மழையால், பி.ஏ.பி., தொகுப்பு அணைகளுக்கான தண்ணீர் வரத்து அதிகரிப்பதால், நடப்பாண்டில் தண்ணீர் பற்றாக்குறை நீங்கி, பாசனம் செழிக்கும்; மின் உற்பத்தியும் பாதிக்காது என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தில், மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், துாணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, திருமூர்த்தி அணைகள் சங்கிலித்தொடர் போன்று அமைக்கப்பட்டுள்ளன.ஆண்டுதோறும் சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியதும், பரம்பிக்குளத்தில் இருந்து, துாணக்கடவு, பெருவாரிப்பள்ளம் வழியாக சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்படும்.மின் உற்பத்திக்கு பின், காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு சென்று இருப்பு வைக்கப்பட்டு, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.இதேபோல, ஆழியாறு பழைய ஆயக்கட்டு, 6,500 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு, 44,380 ஏக்கர் நிலங்களும் என மொத்தம், 50 ஆயிரத்து, 880 ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறுகின்றன.நடப்பாண்டு, பருவமழையின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால், சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.இதுதவிர, பிற அணைகளுக்கும், நீர்வரத்து உயர்ந்து வருகிறது. மழையின் தாக்கம் நீடித்தால், பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டி விடும்.நேற்றைய நிலவரப்படி, பரம்பிக்குளம் அணையின், மொத்தம் உள்ள, 72 அடியில், 13.82 அடியாக நீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 281கனஅடி நீர்வரத்து உள்ளது. வினாடிக்கு, 137 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.ஆழியாறு அணையின் மொத்தம் உள்ள, 120 அடியில், 82.20 அடியாக நீர் இருந்தது. வினாடிக்கு, 450 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. வினாடிக்கு, 36 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மழையளவு எவ்வளவு?

நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழையளவு (மி.மீ.,): சோலையாறு, 122, பரம்பிக்குளம் -- 81, துாணக்கடவு - -56, பெருவாரிப்பள்ளம் -- 78, ஆழியாறு அணை - 21, திருமூர்த்தி - 7, மேல்நீராறு -- 198, கீழ்நீராறு -- 147, மேல்ஆழியாறு - -4, காடம்பாறை - - 60, வால்பாறை - -107, வேட்டைக்காரன்புதுார் -- 27, பொள்ளாச்சி -- 24, மணக்கடவு - -34, நெகமம் - -12.2, நல்லாறு - -19, நவமலை - 10, சர்க்கார்பதி - -36 என்ற அளவில் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி