- நிருபர் குழு -: பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் ஆய்வு செய்தார். பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில், ஓட்டுச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த, 4ம் தேதி முதல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கி பொதுமக்களிடம் பூர்த்தி செய்து பெறுகின்றனர். அதில், நெகமம், குள்ளக்காபாளையம் பகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி ஆய்வு செய்தார். பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, பணிகளை துரிதப்படுத்த அறிவுரை வழங்கினார். பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் வாக்காளர் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவ விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை பார்வையிட்டார். தொடர்ந்து, வால்பாறை தொகுதியில் ஆய்வு செய்தார். கோவை கலெக்டர் பவன்குமார், நிருபர்களிடம் கூறியதாவது: பொதுமக்களின் வசதிக்காக வாகனங்களில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து பெறுகின்றனர். கோவை மாவட்டத்தில், 93 சதவீத விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், 50 சதவீதத்துக்கு மேலாக பூர்த்தி செய்து பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விண்ணப்ப படிவங்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, கூறினார். உடுமலை திருப்பூர் மாவட்டத்திலுள்ள சட்டசபை தொகுதிகளில், இந்திய தேர்தல் கமிஷன் சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை, இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி, நேற்றுமுன்தினம் ஆய்வு மேற்கொண்டார். மடத்துக்குளம் தாலுகா, காரத்தொழுவில், சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளிடம், படிவம் வழங்குதல், பூர்த்தி செய்து திரும்ப பெறுதல், இணைய தளத்தில் பதிவேற்றும் பணி குறித்தும், பொதுமக்களிடம் பணிகள் குறித்தும் விசாரித்தார். மாவட்ட கலெக்டர் மணிஷ் நாரணவரே, மடத்துக்குளம் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சதீஷ்குமார், மடத்துக்குளம் தாசில்தார் குணசேகரன், தேர்தல் துணை தாசில்தார் விஷ்ணு கண்ணன், வி.ஏ.ஓ., முஜிபுர் ரஹ்மான் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். அதே போல், உடுமலை தொகுதியிலும் ஆய்வு மேற்கொண்டார்.