கோவை;கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆச்சிபட்டியில் இன்று (13ம் தேதி) நடக்கும் அரசு விழாவில் பங்கேற்க, சென்னையில் இருந்து தனி விமானத்தில், முதல்வர் ஸ்டாலின் வருகிறார். கோவை விமான நிலையத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின், விழா நடக்கும் இடத்துக்கு காரில் செல்கிறார்.அங்கு, ஒரே நேரத்தில், 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார். கோவை அரசு மருத்துவமனையில், 'ஜைக்கா' திட்டத்தில் ரூ.164 கோடியில் கட்டியுள்ள புது கட்டடத்தை திறந்து வைக்கிறார்.கோவை வனக்கோட்டம் சாடிவயலில் யானைகள் முகாம், சிறுமுகையில் வனவிலங்குகளுக்கான மீட்பு மற்றும் மறுவாழ்வு, சிகிச்சை மையம், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம், காளப்பட்டி சிட்கோ தொழிற்பேட்டையில் தென்னை நார் சார்ந்த பொருட்கள் பரிசோதனை கூடம் அமைக்கும் திட்டங்களை, துவக்கி வைக்கிறார். போக்குவரத்து மாற்றம்
இதனையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்து, எஸ்.பி., பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.கோவையிலிருந்து பொள்ளாச்சி, உடுமலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள், கோவில்பாளையத்தில் இடதுபுறம் திரும்பி, நெகமம் ரோட்டில், கக்கடவு வழியாக நெகமம் நால்ரோடு வந்து, பல்லடம் -- பொள்ளாச்சி ரோட்டில், கரப்பாடி பிரிவு வழியாக அனுப்பர்பாளையம், திப்பம்பட்டி வழியாக செல்ல வேண்டும்.கேரளாவில் இருந்து வாளையார் வழியாக, கோவை வரும் கனரக வாகனங்கள், பாலத்துறை சந்திப்பு வழியாக அனுப்பப்படும்.அவிநாசியில் இருந்து கோவை வரும் கனரக வாகனங்கள், கருமத்தம்பட்டி சந்திப்பு வழியே அனுப்பப்படும்.திருச்சி சாலை வழியே கோவை வரும் வாகனங்கள், காரணம்பேட்டை சந்திப்பு வழியாக அனுப்பப்படும்.பொள்ளாச்சியில் இருந்து, கோவை நோக்கி வரும் இலகுரக வாகனங்கள், வடக்கிபாளையம் பிரிவில், இடதுபுறம் திரும்பி, வடக்கிபாளையம், சூலக்கல் வழியாக, ரூட்ஸ் கம்பெனியின் இடது புறம் திரும்பி, கோவை ரோட்டை அடைய வேண்டும்.