அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சப் - கலெக்டராக இருந்த கேத்ரின் சரண்யா மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில், ஈரோட்டில் பயிற்சி உதவி கலெக்டராக இருந்த ராமகிருஷ்ணசாமி, பொள்ளாச்சி சப் - கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டார். தென்காசியை சேர்ந்த இவர், கடந்த, 2023ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பேட்ஜை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சியில் பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு வருவாய்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். சப் - கலெக்டர் கூறுகையில், ''பொள்ளாச்சி பழமை வாய்ந்ததுடன், இயற்கை சூழல், அமைதியான இடமாக உள்ளது. ஒவ்வொரு பகுதி மக்களின் தேவைகளும் வேறு, வேறாக இருக்கும். அவை கண்டறிந்து சரி செய்யப்படும். ''முக்கியமாக பழங்குடியின மக்களின் குறைகள் தீர்க்கவும், அவர்களது படிப்புக்கான பிறப்பு சான்றிதழ் உள்ளிட்டவை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.