பொள்ளாச்சி:பொள்ளாச்சி - கஞ்சம்பட்டி செல்லும் பஸ், ஜோதிநகர் வழியாக முன்பு சென்ற வழித்தடத்தில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது.ஜோதிநகர் முன்னாள் கவுன்சிலர் ஐயப்பன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி - கஞ்சம்பட்டி செல்லும் அரசு பஸ் (வழித்தடம் எண் 49) ஜோதிநகர் வழியாக செல்லும் போது, ருக்மணியம்மாள் பள்ளி பஸ் ஸ்டாப், ஜோதிநகர் 'சி' காலனி பஸ் ஸ்டாப், ஜி.எஸ்.டி., பவன், சிவன் கோவில், ஜோதிநகர் 'ஏ' காலனி பஸ் ஸ்டாப்கள் வழியாக சென்றது.ஜோதிநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக ரோடுகள் தோண்டப்பட்டு பல ஆண்டுகளாக தார் சாலை அமைக்கப்படாமல் இருந்தது. இதனால், ஜோதிநகர் 'சி' காலனி, ஜி.எஸ்.டி., பவன், சிவன் கோவில் பஸ் ஸ்டாப்களில் பஸ் நிறுத்தாமல் நேராக சென்றது. தற்போது, பாதாள சாக்கடை பணிகள் முடிந்து அனைத்து பகுதிகளிலும் தார் சாலை அமைக்கப்பட்ட பின், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் பஸ் செல்வதில்லை.இதனால், மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள், பஸ் வசதியை பயன்படுத்த முடியவில்லை. எனவே, முன்பு இயங்கி வந்தது போல், அதே வழித்தடத்தில் பஸ் முறையாக இயக்கி, அனைத்து ஸ்டாப்களிலும் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:தே.மு.தி.க.,வின் மறைந்த தலைவர் விஜயகாந்த், நாட்டுப்பற்று, மொழிப்பற்று கொண்டவர்; சினிமாவை தாண்டி பல நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.அவரது சேவையை பாராட்டி கடந்த, 2003ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி அப்துல்கலாம், மத்திய அரசின் சிறந்த குடிமகன் விருதினை வழங்கினார்.விஜயகாந்த்துக்கு, பொள்ளாச்சி பிடித்த பகுதியாக இருந்தது. படப்பிடிப்புக்கு வரும் போதெல்லாம் ராஜாமில் ரோட்டில் தனியார் ேஹாட்டலில் தங்கியிருந்தார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், ராஜாமில் ரோட்டில் நடைபயிற்சியை மேற்கொள்வார்.எனவே, பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டிற்கு, 'வள்ளல் விஜயகாந்த்' ரோடு என்று பெயர் வைக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.