விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை கூடாது
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடை போலீஸ் ஸ்டேஷனில், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம், சார்பில் மாநிலத் தலைவர் பாபு தலைமையில், விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர்.அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- கடந்த 2009ம் ஆண்டு முதல் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக, பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் மற்றும் கள் இறக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு போராடி வருகிறோம்.இந்த சூழ்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் காரமடை போலீசார், தென்னை மரங்களில் இருந்து நீராபானம் மற்றும் கள் இறக்கும் விவசாயிகளை கடுமையாக மிரட்டி, மிகவும் மோசமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். தொடர்ந்து, விவசாயிகளை மிரட்டி, தேவையின்றி கடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போன்று நடந்தால், காரமடை போலீஸ் ஸ்டேஷன் முன்பாக, விவசாய சங்கத்தின் சார்பாக முற்றுகை போராட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.