பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளின் 254 வாகனங்கள் ஆய்வு செய்து, 25 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. தமிழகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள், ஆறு மாதத்துக்கு ஒரு முறை என, ஆண்டுக்கு இருமுறை சோதனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி, பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலாம்பட்டி தனியார் திருமண மண்டப வளாகத்தில் நடந்தது. முதற்கட்டமாக பள்ளி வாகன டிரைவர்களுக்கு வாகனங்கள் பாதுகாப்பாக இயக்குவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் செழியன் தலைமை வகித்தார். டிராபிக் போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பங்கேற்றனர். வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் அதிகாரிகள், ஒவ்வொரு பஸ்சாக ஆய்வு செய்தனர். அதில், படிக்கட்டு, அவசர கால கதவு, டயர்கள், முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள், வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட, 34 பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியதாவது: இரண்டாவது முறையாக, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், பள்ளி வாகனங்கள் சோதனையிடப்படுகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, 75 பள்ளிகளில், 420 வாகனங்கள் உள்ளன. அதில், 252 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. டிரைவர் லைசென்ஸ், சென்சார் முறையாக இயங்குகிறதா, படிக்கட்டுகள், குழந்தைகள் எளிதாக செல்லும் வகையில் அமைந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இதில், குறைபாடுகள் உள்ள, 25 வாகனங்கள் கண்டறியப்பட்டன. இந்த வாகனங்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்து ஏழு நாட்களுக்குள் மீண்டும் கொண்டு வர அறிவுரைகள் வழங்கப்பட்டன. வாகனத்தில் உதவியாளர் இல்லாமல் வாகனங்களை இயக்க கூடாது. விதிமுறை மீறி வாகனங்கள் இயக்க கூடாது. விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். அதிவேகமாக இயக்கக்கூடாது என, டிரைவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. விதிமுறைகள் பின்பற்றாத வாகனங்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாயிலாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.