பழுது நீக்காமல் புறநகர் பஸ்கள் இயக்கம்; நடுவழியில் நிற்பதால் அதிருப்தி
பொள்ளாச்சி; பொள்ளாச்சி பணிமனையில் இருந்து, பழுது நீக்கம் செய்யப்படாமல் பல புறநகர் பஸ்கள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சியில் உள்ள மூன்று கிளைகளில் இருந்து, 80க்கும் மேற்பட்ட புறநகர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, பழநி, திருப்பூர் என பிற கிளைகளில் இருந்து, 60க்கும் மேற்பட்ட பஸ்கள், பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றன. ஆனால், பல பஸ்கள் முறையாக பழுது நீக்கம் செய்யப்படாமல் இயக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். புறநகர் பஸ்களே அடிக்கடி வழித்தடத்தில் நின்று விடுவதால், பயணியர் பரிதவிக்கின்றனர். சமீபத்தில், டி.என். 38 என் 3307 எண் கொண்ட கோவை - பழநி இடையே இயக்கப்படும் பஸ், வழித்தடத்தில் மக்கர் ஆகி நின்றது. அதில் பயணித்தவர்கள், குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பாதித்தனர். மக்கள் கூறியதாவது: கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள் மட்டுமின்றி, புறநகர் பஸ்களும் போதிய பராமரிப்பின்றி உள்ளன. குறிப்பாக, பழுது நீக்கம் செய்யப்படாமல் அதிக பஸ்கள் இயக்கப்படுகின்றன. பிரேக் பிடிக்காமை, வைபர் மற்றும் 'ெஹட் லைட்' சரிவர செயல்படாதது, 'கியர் பாக்ஸ்' பிரச்னை என, அடிக்கடி சில பஸ்கள் மக்கர் ஆகி நடுவழியில் பயணியர் இறக்கி விடப்படும் நிலை தொடர்கிறது. முற்றிலும் பழுதடைந்த பல பஸ்களுக்கு பட்டி, டிங்கரிங் பார்த்து இயக்கப்படுவதால், டிரைவர் மற்றும் கண்டக்டர்களும் அவதிக்குள்ளாகின்றனர். தொலைதுாரங்களுக்கு நிம்மதியாக பயணிக்க முடிவதில்லை. இவ்வாறு, கூறினர். அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'தேவையான உதிரிபாகங்கள் தருவிக்கப்படுகிறது. இருப்பினும், தலைமை அலுவலகத்தில் இருந்து முழுமையாக உதிரி பாகங்கள் கிடைத்தால் மட்டுமே பழுதான பாகங்கள் புதிதாக மாற்றி அமைக்கப்படும்,' என்றனர்.