| ADDED : நவ 20, 2025 05:24 AM
சூலுார்: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளராக இருந்தவர் மகாலிங்கம். சில ஆண்டுகளுக்கு முன், ம.தி.மு.க., வில் இருந்து தி.மு.க., வில் இணைந்த அவருக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், அவரது பதவியை தலைமை திடீரென பறித்துள்ளது. கட்சி பணிகளில் ஆர்வம் காட்டாதது, அ.தி.மு.க., வுடன் தொடர்பில் இருப்பது, நிர்வாகிகள், தொண்டர்களை அனுசரித்து செல்லாதது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மேல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சட்டசபை தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வரும் முதல்வரை சமீபத்தில் மகாலிங்கமும் சந்தித்துள்ளார். அவரது நடவடிக்கைகள் தலைமைக்கு திருப்தி அளிக்காததால், அவரது ஒன்றிய செயலாளர் பொறுப்பை அதிரடியாக பறித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து, சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளராக, செலக்கரச்சல் ஊராட்சி சித்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு, கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என, தலைமைக் கழகம் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.