கோவையில் நாளை ஆசிரியர் கலந்தாய்வு; வெளிப்படைத்தன்மை இருக்க எதிர்பார்ப்பு
கோவை; நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் நேரடி நியமனம், பணி நிரவல் மற்றும் பொதுமாறுதல் கலந்தாய்வு, நாளை முதல் 30ம் தேதி வரை, கோவை புனித மைக்கேல்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.எஸ்.எஸ்.குளம், பேரூர் உள்ளிட்ட 15 வட்டாரங்களில் பணிமாறுதல் கோரி இடைநிலை ஆசிரியர்கள் 202 பேர், ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர்கள் 50 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 61 பேர், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 12 பேர் என மொத்தமாக 325 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 31 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.அதேபோல், கோவை வருவாய் மாவட்டத்திற்குள் பணிமாற்றத்துக்காக இடைநிலை ஆசிரியர்கள் 61 பேர், ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர்கள் 8 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 44 பேர், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 5 பேர் என மொத்தம் 118 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவற்றில் 103 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, 15 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு பணிமாற்றம் கோரி, 41 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 33 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, 8 விண்ணப்பங்கள் என மொத்தம் 54 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.இதில் பெரும்பாலானவை, மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுடையது. அவர்களுக்கு, அலகு விட்டு அலகு மாறுதல் முறையே நடைமுறையில் உள்ளது. ஆனால், அவர்கள் எமிஸ் தளத்தில் விண்ணப்பித்ததால் நிராகரிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் மறைப்பு
கோவை மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில் 35 ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். மேலும், 13 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உட்பட மொத்தமாக, 40 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.பொதுவாக, எந்தெந்த பள்ளிகளில் எந்த பாடப்பிரிவுக்கு ஆசிரியர் தேவையெனும் தகவல்கள், கலந்தாய்வு நடைபெறும் நேரத்தில் மட்டுமே வெளியிடப்படுகின்றன. ஆனால், காலியிடங்கள் விவரங்களை முன்கூட்டியே வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விரும்பிய இடத்துக்கு மாறுதல்
மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, பணியிடங்களின் முழு விவரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலும், மேல்மட்ட கல்வி அதிகாரிகளிடமும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சில ஆசிரியர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, பல லட்சம் ரூபாய் செலுத்தி, தங்களுக்கு விருப்பமான இடங்களில் பணி நியமனம் பெறுகின்றனர். இதனால், முறையாக பணி மாறுதலுக்காக நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் ஆசிரியர்கள் வஞ்சிக்கப்படுவதாக, ஆசிரியர் சங்கத்தினர் புலம்பித்தீர்க்கின்றனர்.