| ADDED : பிப் 20, 2024 11:41 PM
தொண்டாமுத்தூர்;நல்லூர்வயல்பதியில் உள்ள மலைவாழ் மக்களின் குலதெய்வ கோவிலில், அம்மன் சிலை சேதப்படுத்தியது குறித்து, பேரூர் டி.எஸ்.பி., நேரில் விசாரணை நடத்தினார்.நல்லூர் வயல்பதி மக்களின் குலதெய்வ கோவிலான, சடையாண்டியப்பன் கோவில் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், சடையாண்டியப்பன், அம்மன், கருப்பராயன், கன்னிமார், விநாயகர் ஆகிய தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், 2022ம் ஆண்டு, கருப்பராயன் சுவாமி சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதேபோல, இக்கோவிலில் உள்ள அம்மன் சிலையை, மூன்றாவது முறையாக, கடந்த நான்கு நாட்களுக்கு முன் மர்மநபர்கள் சேதப்படுத்தி சென்றனர். இந்து முன்னணியினர், காருண்யா நகர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து, பேரூர் டி.எஸ்.பி., வெற்றிசெல்வன் நேற்று நேரில், ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். அருகில் உள்ள தோட்டங்களை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தினார்.