| ADDED : மார் 04, 2026 06:37 AM
சந்திர கிரகணத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி மற்றும் உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் நடை சாற்றப்பட்டன. சந்திரகிரகணம் நேற்று மாலை, 3:20 மணிக்கு துவங்கி, 6:47 மணி வரை நிகழ்ந்தது. இதையடுத்து, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் மதியம், 12:30 மணிக்கு நடை சாற்றப்பட்டது. இன்று காலை, 6:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம் போல பூஜைகள் நடைபெறுகிறது. பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், சந்திரகிரகணத்தையொட்டி நடை சாற்றப்பட்டு இரவு, 7:00 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம்,1:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை கோவில் நடை சாற்றப்பட்டது. பவுர்ணமி திருவிளக்கு வழிபாடு நடக்கவில்லை. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இன்று காலை, 6:00 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக நடை திறக்கப்பட்டு வழக்கம் போல பூஜைகள் நடைபெற உள்ளன. பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று சந்திரகிரகணத்தையொட்டி நடை சாற்றப்பட்டன. உடுமலை சந்திர கிரகணத்தையொட்டி, உடுமலை கோவில்களில் நடை அடைக்கப்பட்டது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று மாலை நடை அடைக்கப்பட்டது. - நிருபர் குழு -: