கோவைக்கு வந்தாச்சு படபடக்கும் பட்டாசு!
தீபாவளி என்றாலே புத்தாடைகளும், இனிப்பு வகைகளும் இருந்தாலும், படபடக்கும் பட்டாசு இருந்தால்தான் அது பண்டிகை!ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு தயாரிப்பாளர்கள், புதிய ரக பட்டாசுகளை அறிமுகப்படுத்துகின்றனர். பேட் பாய், கலர் பேன்டசி, சின்ன சோட்டா, டாப் டென், டிவிங்கிள் ஸ்டார், ஒயிட் ரோஸ், ரெட் ரோஸ், டோரா டோரா, டிஸ்கோ பிளாஸ், ஜிக் ஜாக்... இப்படி பல புதிய ரக பட்டாசுகள், வடகோவை சிந்தாமணி கூட்டுறவு பண்டகசாலையில் விற்பனைக்கு வந்துள்ளன. முற்றிலும் குழந்தைகளை கவரும் வகையில், இந்தாண்டு பட்டாசுகள் அறிமுகமாகியுள்ளன. இதோ, புதிய ரக பட்டாசுகள் குறித்த ஒரு ரவுண்டப்! பேட் பாய்
குண்டு பையன் போல் இருக்கும் இந்த பட்டாசுக்கு, பொருத்தமான பெயர் தான் வைத்துள்ளனர். பட்டாசு, மேலே சென்று வெடிக்குமாறு தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. ஒயிட் ரோஸ், ரெட் ரோஸ்
பாராசூட் போல பறந்து வெடிக்கும் இந்த பட்டாசில் இருந்து வெள்ளை, சிவப்பு ரோஜா இதழ்கள், விழுவது போல் மத்தாப்புக்கள் சிதறுவது தான், இதன் தனிச்சிறப்பு. குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும் என்கின்றனர் விற்பனையாளர்கள். சின்ன சோட்டா
இதுவும் வானில் சென்று வெடிக்கும் ரக பட்டாசு தான். ஆனால், குறைந்த உயரம் செல்லுமாம். மூர்த்தி சிறியதாக இருந்தாலும், கீர்த்தி பெருசா இருக்கும் என்கின்றனர். டிஸ்கோ பிளாஷ்
டிஸ்கோ டான்ஸ் என்றால் பலருக்கும் இஷ்டம் தான். அதுபோல் வடிவமைத்துள்ளனர் இந்த பட்டாசை. கொளுத்தியதும், வளைந்து நெளிந்து ஒளிருமாம். கிளாசிக் பேன்டசி
அந்த காலத்தில் புஸ்வாணம், கம்பி மத்தாப்பு, என, ஒரு சில பட்டாசுகள் மட்டுமே இருந்தன. ஆனால், இன்று வானத்தில் போய் பூங்கொத்தாய் வெடித்து சிதறும், பட்டாசுகளிலேயே பல ரகங்கள் வந்துவிட்டன. இந்த கலர் பேன்டசியில், மேலே போய் வெடித்தவுடன் அதில் உள்ள பொம்மை போன்று மத்தாப்பூ வெளிவரும் என்கின்றனர்.