கோவை;கோவையில், மலர் கண்காட்சி 'கனவுகள் மலரட்டும்' என்ற பெயரில் வரும், 23 முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் கோவை ரோட்டரி கிளப் சார்பில், மூன்று நாள் நடைபெறும் இந்நிகழ்வு, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு, சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, வரவழைக்கப்பட்ட மலர்களை கொண்டு கண்காட்சி, பிரம் மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டுத்தோட்டத்திற்கு பயன்படும் அனைத்து பொருட்களையும், இக்கண்காட்சியில் பொதுமக்கள் வாங்க இயலும். தவிர, பழம், காய்கறிகளில் கார்விங், நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட துலிப் மலர்களின் கார்டன், போன்சாய் கார்டன், ஆக்சிஜன் பார்க், அடர்நடவு முறையில் மியாவாக்கி கார்டன், ஆர்கிட் மலர்கள், கட் மலர்கள் என, பல அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:மலர் கண்காட்சியை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். கண்காட்சி மட்டுமின்றி தினமும் பாரம்பரிய கலை நிகழ்வுகள், காலை மற்றும் மாலை யோகா பயிற்சி, நாய்கள் கண்காட்சி, மலர் கோலப்போட்டி, கலை அரங்கம், பழங்கால கார்கள் கண்காட்சி, உணவு அரங்குகள், பிற விற்பனை அரங்குகள் என, பல பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.குறிப்பாக, 'இந்தியா ஒளிரட்டும்' என்ற 'தீமில்' சந்திராயன் நிலவில் நிலைநிறுத்தப்பட்ட காட்சியை, பூக்கள் வடிவில் வடிவமைக்கவுள்ளோம். ஒவ்வொரு மலர், மரங்கள், செடிகளில் க்யூ.ஆர்., கோடு வைக்கப்படும் என்பதால், அம்மரம், செடிகள் குறித்து, எளிதாக அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு இடங்களிலும், குடும்பத்துடன் அமர்ந்து நேரம் கழிக்கவும், அழகான நடைபயணம் செல்லவும் இயலும். மலர் சார்ந்த, 'ஸ்டார்ட் அப்' துவங்க நினைப்பவர்களுக்கும், உதவிகரமாக அமையும். வங்கிகளும் ஸ்டால்கள் அமைக்கவுள்ளன. கண்காட்சியில் பார்க்கிங், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.