உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தந்தத்தால் தாக்கியது யானை ஜீப்பும் உரசியதால் திக்... திக்...

தந்தத்தால் தாக்கியது யானை ஜீப்பும் உரசியதால் திக்... திக்...

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே வனக்கல்லுாரி வளாகத்துக்குள் நுழைந்த யானையை, வனத்துக்குள் விரட்டிய போது, வனத்துறை ஜீப்பை யானை தாக்கியது. மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கீழ் இயங்கும் வனக்கல்லுாரி வளாகத்தில், நேற்று முன்தினம் இரவு, மேட்டுப்பாளையத்தில் அடிக்கடி உலா வரும் 'பாகுபலி' என்ற ஆண் காட்டு யானை நுழைந்தது. சிறுமுகை, மேட்டுப் பாளையம் வனத்துறையினர், ஜீப்பில் இருந்தவாறே, வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். ஆவேசமடைந்த யானை, தந்தங்களால் ஜீப்பை தாக்கி நகர்ந்து சென்றது. ஜீப் மீண்டும் முன்னோக்கி செல்லும் போது, யானையின் பின் பக்கத்தில் லேசாக மோதியது. சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறியதாவது:- யானையை வனப்பகுதியில் விரட்ட முயற்சித்த போது, தந்தத்தால் ஜீப்பை தாக்கியது. சுதாரித்த வனப்பணியாளர்கள், வாகன சைரன் எழுப்பியும், சத்தமிட்டும், வனத்துக்குள் விரட்ட முயற்சித்தனர். பின், ஜீப்பை திருப்பும் போது, யானையின் முன்பக்கம் மரம் இருந்ததாலும், அருகில் கட்டடங்கள் இருந்ததாலும், முன்பக்கம் இருந்த மரத்தில் மோதி, திரும்ப முடியாத நிலையில், ஜீப்பில் லேசாக உரசியது. பின், அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. இச்சமயத்தில், வனப்பணியாளர்களுக்கோ, யானைக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி