| ADDED : பிப் 23, 2024 10:56 PM
அன்னுார்:அன்னுார் ஒன்றிய அலுவலகத்தில், மேல் தள சிமென்ட் காரை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக ஊழியர்கள் காயமின்றி தப்பினர்.அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம், 1962ல் கட்டப்பட்டது. 62 ஆண்டுகளாக உள்ள இந்த கட்டடத்தில் பல இடங்களில் விரிசல்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று மதியம் அலுவலகத்தின் கிழக்குப் பகுதியில் மேல் தளத்திலிருந்து திடீரென சிமென்ட் காரை நான்கடி நீளம், நான்கடி அகலத்திற்கு பெயர்ந்து சத்தத்துடன் கீழே விழுந்தது. அங்கு பணிபுரிந்து வந்த ஒன்றிய மேலாளர் சொர்ணவேலம்மா டேபிளுக்கும், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஜெகநாதன் டேபிளுக்கும் இடையில் விழுந்தது. சத்தத்துடன் சிமென்ட் காரை விழுந்ததையடுத்து அருகில் இருந்த அலுவலகத்தில் இருந்தும் ஊழியர்கள் ஓடி வந்தனர். யார் மீதும் விழாததால், காயம் ஏற்படவில்லை. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய பொறியாளர்கள் அங்கு ஆய்வு செய்தனர். இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகள் அகற்றப்பட்டன. மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஒன்றிய சேர்மன் கூறுகையில், ''ஒன்றிய அலுவலக கட்டடத்தை அகற்றி விட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பலமுறை திட்ட வரைவு அனுப்பினோம். எனினும் இதுவரை நடவடிக்கை இல்லை. பெரும் விபரீதம் நடக்கும் முன், அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.