| ADDED : டிச 08, 2025 05:40 AM
வால்பாறை: சின்னக்கல்லார் தொங்கு பாலம் காட்சிப்பொருளாக மாறியதால் சுற்றுலா பயணியர் கவலையடைந்துள்ளனர். வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். வனத்துறை சார்பில் பல்வேறு சுற்றுலா இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சுற்றுலா பயணியர் செல்ல 50 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை வனத்துறை சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க சுற்றுலா பயணியர் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இங்கு ஆங்கிலேயர் ஆட்சியின் போது கட்டப்பட்ட தொங்குபாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக சுற்றுலா பயணியர் நடந்து செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். சுற்றுலா பயணியர் கூறியதாவது: சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறை சார்பில், 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்குள்ள தொங்கு பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணியர் நடந்து செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதே போல், நல்லமுடி காட்சிமுனைப்பகுதியில் சுற்றுலா பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகள் வனத்துறை சார்பில் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.