வலசு குளத்தின் பரப்பு பளிச்; களம் இறங்கிய மாணவர்கள்
பொள்ளாச்சி; உலக நீர் தினத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, வரும், 2030-ம்ஆண்டுக்குள் மக்கள் அனைவருக்கும் தரமான நீர் மற்றும் சுகாதாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனால், அத்தியாவசிய தேவைகள், பாரம்பரியம், கலாசாரம், பொருளாதாரம், ஆரோக்கியம், கல்வி, வளர்ச்சி என சுற்றுச்சூழலுடன் தண்ணீர் ஒன்றியிருப்பதால், தண்ணீரை பாதுகாக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இந்நிலையில், பொள்ளாச்சி என்.ஜி.எம்., கலை கல்லுாரியின் தேசிய மாணவர் படை, டபிள்யூ.டபிள்யூ.எப்., இந்தியா மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, உலக நீர் தினம் மற்றும் புவி நேரத்தை கொண்டாடினர்.பொள்ளாச்சி அருகே, தேவம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வலசு குளத்தின் சுற்று பகுதிகளில், சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நீர் நிலைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினர். மேலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அடையாளமாக, இரவு 8:30 முதல் 9:30 வரை தேவையில்லாத மின்சாதனங்களை அனைத்து வைப்பதாகவும் உறுதிமொழி ஏற்றனர்.