உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதை ஊசி பழக்கம் அதிகரிப்பால் அதிபயங்கர ஆபத்து!: கூடவே அதிகரிக்கிறது ஹெச்.ஐ.வி.,யும்

போதை ஊசி பழக்கம் அதிகரிப்பால் அதிபயங்கர ஆபத்து!: கூடவே அதிகரிக்கிறது ஹெச்.ஐ.வி.,யும்

கோவை: கோவை மாவட்ட மொத்த மக்கள் தொகையில், 0.18 சதவீதம் பேர் ஹெச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக, சமீப காலமாக அதிகரித்து வரும் போதைஊசி கலாசாரத்தையும், சுட்டிக்காட்டுகின்றனர் மருத்துவர்கள்.சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய, தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், எச்.ஐ.வி தொற்று தமிழகத்தில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும், 25 ஆயிரம் பேருக்கு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இத்தகவல், பொதுமக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதுடன், கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய சூழலில், ரத்தம் வாயிலாகவும், மருத்துவமனை ஊசி வாயிலாகவும், எய்ட்ஸ் பாதிப்பு பரவுவது, முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.தகாத பாலியல் உறவுகள் முதன்மை காரணமாக உள்ள அதே சமயம், டேட்டூ, போதை ஊசி பயன்பாடு காரணமாகவும், ஹெச்.ஐ.வி., தொற்றுக்கு பலர் ஆளாகிவருவது தெரியவந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது: ரத்தம் தானமாக பெறும் பொழுது, முழுமையாக அனைத்து பரிசோதனையும் செய்த பின்னரே, நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறது. எந்த மருத்துவமனைகளிலும் ஒருமுறை பயன்படுத்திய ஊசியை, மீண்டும் பயன்படுத்தும் வழக்கம் இல்லை. பாதுகாப்பில்லாத உடல் உறவு, டேட்டூ போடும் இடங்களில், ஒரே ஊசி அனைவருக்கும் பயன்படுத்துவதாலும், டேட்டூ போடும் டை, போதை ஊசி பயன்பாடு காரணமாகவும் இப்பாதிப்பு ஏற்படுகிறது. டேட்டூ போடும் போது, அதற்கான தகுதியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். ஊசி மட்டுமின்றி அதற்கு பயன்படுத்தும் டையும், ஒரு முறைதான் பயன்படுத்த வேண்டும். இத்தொற்று பாதிக்கப்பட்டு உடனடியாக பரிசோதனை செய்தால், பாசிட்டிவ் என முடிவுகள் வராது. தொற்று பாதித்து ஆறு மாதம் பின்னரே, பரிசோதனையில் கண்டறிய முடியும். இதற்கான அனைத்து சிகிச்சைகளும், அரசு மருத்துவமனையில் வழங்கப்படுகின்றன. கோவை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளும், தொற்று பாதிப்பில் பெரிய வேறுபாடுகள் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

ஆண்டுகளில் 0.24 சதவீதம்

கோவை அரசு மருத்துவமனையில், 2023-24ல் 1.82 லட்சம் பேருக்கு பரிசோதனை (கர்ப்பிணிகள்- 65776) மேற்கொண்டதில் 441 பேருக்கும் (கர்ப்பிணிகள்- 19 பேர்), 2024 - 25ல் 1.32 லட்சம் பேருக்கு பரிசோதனை (கர்ப்பிணிகள்- 34,327) செய்ததில் 400 பேருக்கு (கர்ப்பிணிகள்- 13 பேர்) தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனையில், 0.24 சதவீத தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ