களை கட்டிய கலை தெரு நிகழ்ச்சி பார்வைக்கு விருந்து படைத்த படைப்புகள்
கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் நடந்த கலை தெரு நிகழ்ச்சியை, பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.கோவை விழாவில், 17வது பதிப்பு, பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது. தொடர்ச்சியாக நடத்தப்படும் கலை தெரு நிகழ்ச்சி, நடப்பாண்டு 'நிலைத்தன்மை' மையமாக, ரேஸ்கோர்ஸ் ஸ்கீம் சாலையில் நேற்று துவங்கியது.மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார். 120 அரங்குகளில், 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள், தங்கள் கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.மணல் ஓவியங்கள், கேரள சுவரோவியங்கள், கையால் செய்யப்பட்ட தலைகீழ் கண்ணாடி கலை போன்ற பல்வேறு வகையான கலைகள், கிரியேட்டிவ் கேலிகிராபி, 3-டி மோல்ட்ஸ் மற்றும் பல காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.ரெட்ரோ ஓவியங்கள், பிச்சுவாய் பெயின்டிங், காமிக் ஸ்ட்ரிப், குரோச்செட், களிமண் கலை, மட்பாண்டங்கள், மூங்கில் கூடை நெசவு போன்ற பல கலைப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.முகப்பில், தண்ணீர் பாட்டில்களை கொண்டு உருவாக்கப்பட்ட யானை, மரங்கள் பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. தவிர, குழந்தைகளுக்கான ஓவிய பயிற்சி பட்டறைகளும் நடத்தப்பட்டன. மாணவர்களுக்கு பரிசு
விழாக்குழு சார்பில், '2030ல் கோவை' என்ற தலைப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. 133 அரசுப் பள்ளிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 100 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. சிறப்பான மூன்று படைப்புகளுக்கு ரொக்கம் வழங்கப்பட்டது.பி.எஸ்.ஜி., சர்வஜனா மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் இனியவனுக்கு, 10 ஆயிரம், கோவை துணிவணிகர் சங்க மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 1 மாணவி யோகிதாவுக்கு, 7,500, சிங்காநல்லுார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பூஜாவுக்கு 5,000ம் என, பரிசுத் தொகை வழங்கப்பட்டது.எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர், கோவை விழாவின் தலைவர் அருண் செந்தில்நாதன், இணை தலைவர்கள் சவுமியா காயத்ரி, சரிதா லட்சுமி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரதம் ஆகியோர் பங்கேற்றனர். கண்காட்சி இன்றும் நடக்கிறது.
சித்திரம் பேசுதடி
கோவை கணபதியில், 2016ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது, சிறப்பு குழந்தைகளுக்கான 'நிதில்யம்' பள்ளி. சிறப்பு குழந்தைகளை, மற்ற பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கும் அளவுக்கு பிரத்யேகமாக பயிற்சி அளிக்கின்றனர். இதுவரை, 300க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து, அவர்கள் வெவ்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். தற்போது, அன்னுாரிலும் பள்ளி துவங்கப்பட்டுள்ளது.இவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில், 'சித்திரம் பேசுதடி' என்று வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.இதில், சிறப்பு குழந்தைகளிடம் இருக்கும் திறன்கள் கண்டறியப்பட்டு, அவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.நேற்று நடந்த கலை தெரு நிகழ்ச்சியில், சிறப்பு குழந்தைகள் எட்டு பேர் வரைந்த மணல் ஓவியங்கள், மண்டலா, பிச்சுவா, லிப்டான் வகை ஓவியங்கள், பார்வையாளர்களை வியக்க வைத்தன. இதில் விற்பனையாகும் படைப்புகள், குழந்தைகளின் நலனுக்காகவே செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.