| ADDED : ஜன 06, 2024 11:06 PM
எழுத்தாளர்கள் முதுமை அடைந்தாலும், அவர்களின் எண்ணங்களும், உணர்வுகளும் முதுமை அடைவதில்லை.எழுத்துக்களோடும், புத்தகங்களோடும் எப்போதும் இருப்பதால், அவர்கள் தனிமையை உணர்வதில்லை.அவர்களின் படைப்புகளில் கடந்த கால அனுபவங்களும், நிகழ்கால வாழ்க்கையும் கலந்து இருப்பதால், அவர்களின் கதைகள் இளைஞர்களை ஈர்க்கிறது. இதற்கு உதாரணமாக, கோவையை சேர்ந்த பெண் எழுத்தாளர் பாலம் சுந்தரேசனின் படைப்புகளை சொல்லலாம். எழுத்தாளர் பாலம் சுந்தரேசனுக்கு இப்போது 86 வயது. இவர், 'இரண்டு காதலும் பிற கதைகளும்' (Two Loves and Other Stories) என்ற, தனது ஆங்கில சிறுகதை நுாலை வெளியிட்டு உள்ளார். இதில் 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள் உள்ளன. ''எனக்கு சிறு வயதில் இருந்தே கதை புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. அந்த வாசிப்பு அனுபவத்தில் இருந்துதான், சிறுகதைகள் எழுத துவங்கினேன். பத்திரிகைகளில் என் கதைகள் பிரசுரமாகி உள்ளன.வலைதளத்தில் (பிளாக்) ஆங்கிலத்தில் கதைகள் எழுதி வருகிறேன். வாசகர்கள் பலர் நன்றாக இருப்பதாக, கமென்ட் செய்துள்ளனர்,'' என்றார் பாலம் சுந்தரேசன்.''இந்த வயதில் லவ் பற்றி நீங்கள் எழுதியுள்ள புத்தகம் பற்றி...?''''எனது 'Two Loves and Other Stories' படித்துப்பாருங்கள். அந்த காலத்தில் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள் சந்திக்கும் குடும்ப பிரச்னைகளை அதில் சித்தரித்து இருக்கிறேன்.இந்த காலத்து காதல் போல் இல்லை, அந்த காலத்து காதல். அந்த காலத்து காதலில் ஒரு 'த்ரில்' இருந்தது. ஒருவரை ஒருவர் சந்திப்பதே அரிதாக இருக்கும். தொலைதொடர்பு எதுவும் இல்லை. இன்றைக்கு மொபைல்போன், இன்டர்நெட், வாட்ஸ்ஆப் என, பல மீடியா வந்து விட்டது.நினைத்தவுடன் மொபைல் போனில் பேசலாம். காலம் எதுவாக இருந்தாலும் காதல் என்ற உணர்வு ஒன்றுதான்,'' என்று கூறி விடைபெற்றார் பாலம் சுந்தரேசன்.