உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகராட்சி கமிஷனர் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை; சிபாரிசு வந்தா... அவ்ளோதான்! பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த ஒத்துழைக்கணும்

நகராட்சி கமிஷனர் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை; சிபாரிசு வந்தா... அவ்ளோதான்! பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த ஒத்துழைக்கணும்

பொள்ளாச்சி:'பொள்ளாச்சி நகராட்சியில் துாய்மை பாதுகாக்கப்பட வேண்டும். இனி கடைகள் முன் குப்பை கொட்டியிருந்தால் அபராதம் விதிக்கப்படும்,'' என, நகராட்சி கமிஷனர், வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.பொள்ளாச்சி நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம், கழிவுகளை கையாளுதல், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தவிர்த்தல் மற்றும் அனைத்து தொழில்களுக்கும் நகராட்சியில் தொழில் உரிமம் பெறுதல் உள்ளிட்டவை குறித்து, கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. நகர்நல அலுவலர் முருகானந்தம் வரவேற்றார். வியாபாரிகள் பங்கேற்றனர்.நகராட்சி கமிஷனர் கணேசன் தலைமை வகித்து பேசியதாவது:தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி விதிகளில் குறிப்பிட்டுள்ள, நகராட்சி அட்டவணை மற்றும் விதிகளின்படி, அனைத்து வணிக நிறுவனங்கள், தொழில் உரிமம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நகராட்சியில் உரிமம் பெற்றுள்ளவர்கள், தொழில் உரிமங்களை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும்.நகராட்சி பகுதியில் வணிக நிறுவனங்கள், தொழில் கூடங்கள் நடத்துவோர், தங்களது நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொழில்வரி மற்றும் உரிம கட்டணங்களை செலுத்த வேண்டும்.தவறும் பட்சத்தில் நகராட்சியில் உரிமம் பெறாத கடைகளை, தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சிகள் விதிகளின் படி பூட்டி 'சீல்' வைக்கப்படுவதுடன், உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழ்நாடு வணிகர்கள் நல வாரியத்தில் அனைத்து வணிகர்களும் இணைந்தால் வாரியம் வாயிலாக கிடைக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும்.குடியிருப்பு நலச்சங்கங்கள், திருமண மண்டபங்கள், மார்க்கெட், ேஹாட்டல்கள், பல்பொருள் அங்காடிகள் போன்ற தினசரி, 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள், திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016ன்படி, மொத்த கழிவு உருவாக்குபவர்களாக கருதப்படுவர்.அவர்கள் தங்களது வளாகத்தில் உருவாகும் கழிவுகளை, தாங்களாகவே முறையாக தீர்வாக்கம் செய்து கொள்ள வேண்டும்.இல்லையெனில் நகராட்சியிடம் தெரிவித்தால் நகரமன்ற கூட்ட அனுமதி பெற்று, அதற்குரிய கட்டணம் வசூலித்து, குப்பை அகற்றப்படும். நகரம் துாய்மையாக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாகும்.கடைகள் எல்லாம் சுத்தமாக உள்ளன; ஆனால் நகர தெருக்கள் தான் குப்பையாகி கிடக்கிறது. இனி வணிக வளாகங்கள் முன் குப்பை கிடந்தால், அந்த கடைக்கு அபராதம் விதிக்கப்படும்.பிளாஸ்டிக் பயன்பாடு என்பதே தவறானதாகும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மட்டுமின்றி, அனைத்து வகை பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என வியாபாரிகள் முன்வந்தால் நகரின் துாய்மை காக்கப்படும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், நகருக்குள் கொண்டு வரக்கூடாது. அவ்வாறு கொண்டு வந்தால் அபராதம் விதிப்பதோடு, கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும். சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் போது சிபாரிசு வந்தால் ஏற்க மாட்டேன். பேப்பரில் பேக் செய்து கொடுக்கலாம்; மஞ்சப்பை பயன்படுத்த முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

கட்டண 'பார்க்கிங்' தேவை!

வியாபாரிகள் பேசியதாவது:தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம். பிளாஸ்டிக்கு மாற்றாக உள்ள பொருட்களை பயன்படுத்த ஒத்துழைப்பு தரப்படும். அதற்கு கொஞ்ச காலம் அவகாசம் அவசியமானது. பூட்டிய கடைகளுக்கு வரி வசூலிப்பதை தவிர்க்கலாம்.வியாபாரிகள் மிகுந்த சிரமத்தில் உள்ள நிலையில், தொழில் உரிம கட்டணம் அதிகரித்துள்ளது. இதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகள் வசதிக்காக தொழில் உரிம கட்டணம் செலுத்த தனி 'கவுன்டர்' உருவாக்க வேண்டும்.சாக்கடை கால்வாய்களில் அதிகளவு மதுபான பார்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள் தான் கிடக்கின்றன. இதை கட்டுப்படுத்த வேண்டும். நகரில் நெரிசலை கட்டுப்படுத்த, நகராட்சி சார்பில்,'கட்டண பார்க்கிங்' திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் நகரில் நெரிசலுக்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு, பேசினர்.இதற்கு கமிஷனர், 'தொழில் உரிம கட்டணம் வசூலிக்க நாங்களே தேடி வருகிறோம். 'பார்க்கிங்' பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை