நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் வழங்கணும்; ஒன்றிய மக்கள் வலியுறுத்தல்
குடிமங்கலம்; கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவு, அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்க, குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடிமங்கலம் ஒன்றிய மக்கள் வலியுறுத்தியுள்ளனர். குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளில், 1.24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். போதிய குடிநீர் ஆதாரங்கள் இல்லாத அப்பகுதி மக்களுக்கு, பாதுகாப்பான குடிநீர் கிடைக்க, புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடந்த, 2017ல், 54.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், 23 ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு, நபர் ஒன்றுக்கு, நாள்தோறும், 55 லிட்டர் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என, குடிநீர் வடிகால் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 5 லிட்டர் குடிநீர் கிடைப்பதில்லை என, குடிமங்கலம் ஒன்றிய கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திட்ட வடிவமைப்பின்படி, திருமூர்த்தி அணையிலிருந்து, கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு தேவையான தண்ணீர் எடுக்கப்பட்டு, நீரேற்று நிலையத்தில் இருந்து பிரதான குழாயில், வெளியேற்றப்படுகிறது. திட்டத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ள புதுப்பாளையம், அனிக்கடவு, வீதம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு முறையாக தண்ணீர் வருவதில்லை. இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் அனுப்பியுள்ள மனு: திருமூர்த்தி அணையிலிருந்து நீரேற்று நிலையம் வாயிலாக தட்டுப்பாடு இல்லாமல், பிரதான குழாயில், தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஆனால், பல கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாக உள்ளது. உள்ளூர் போர்வெல் தண்ணீரை கலந்து வினியோகிப்பதால், நோய்த்தாக்குதலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. வழியோரத்தில், அதிக தண்ணீர் எடுப்பது, பிரதான குழாய் அடிக்கடி உடைவது உள்ளிட்ட காரணங்களால், கூட்டுக்குடிநீர் திட்டத்தின் நோக்கமே வீணாகியுள்ளது. இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.