சுத்திகரித்த கழிவுநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு! ஆலோசனை கூட்டத்தில் கமிஷனர் உறுதி
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி நகராட்சியில் சுத்திகரிப்பு செய்யப்படும் கழிவுநீர் பங்கீடுபிரச்னை குறித்து மாவட்ட நிர்வாகம் பார்வைக்கு கொண்டு சென்று, குழு அமைத்து தீர்வு காணலாம், என, நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம், 170.226 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டது. அதில், மாட்டு சந்தையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 11.25 மில்லியன் லிட்டர் நாளொன்றுக்கு சுத்திகரிப்பு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.நகராட்சியில் சுத்திகரிப்பு செய்யப்படும் கழிவுநீர் பங்கீடு பிரச்னை குறித்துஇரு தரப்பு விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி கமிஷனர் கணேசன் தலைமை வகித்தார். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கிருஷ்ணா குளம் நீரினை பயன்படுத்தும் விவசாயிகள், கஞ்சம்பட்டி பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.கிருஷ்ணாகுளம் நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் பேசுகையில், 'பொள்ளாச்சி நகராட்சியில் இருந்து கழிவு நீர், கிருஷ்ணா குளத்துக்கு வருகிறது. அந்த நீரை பயன்படுத்தியே விவசாயம் செய்கிறோம். பாசன வசதியில்லாத சூழலில், இந்த கழிவுநீரையே பல கிராமங்களில் விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம்.மேலும், இந்த கழிவுநீர் வரும் வழியோர கிராமங்களில் நிலத்தடி நீர் பாதுகாக்க உதவியாக உள்ளது. எனவே, சுத்திகரிப்பு செய்தாலும் அந்த நீரை திசை மாற்றாமல் புவியியல் அமைப்பு படி எங்களுக்கே வழங்க வேண்டும்,' என்றனர்.கஞ்சம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகள் பேசுகையில், 'அரசாணைப்படி சுத்திகரிப்பு செய்த கழிவுநீரை எங்களுக்கு கேட்கிறோம். இதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. வறட்சியான காலத்தில் சாகுபடி செய்த பயிர்களை காக்க போராட வேண்டிய நிலை உள்ளது.பி.ஏ.பி., பாசன நீரும், இரண்டாண்டுக்கு ஒரு முறை தான் கிடைக்கும். எனவே, இந்த நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.நகராட்சி கமிஷனர் கூறியதாவது:நகராட்சியில் குடிநீர் மற்றும் மற்ற தேவைக்காக நீர் வினியோகிக்கப்படுகிறது. அதில், 20 சதவீதம் குடிநீர், மீதம் உள்ள, 80 சதவீதம் மாற்று பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது. இவை தற்போது சுத்திகரிப்பு செய்யப்படுகின்றன.நகரில், பாதாள சாக்கடை திட்டத்தில், 20 ஆயிரம் வீட்டு இணைப்புகளில்,6,752 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள, 14 ஆயிரம் இணைப்புகள் வழங்க வேண்டியதுள்ளது.11.25 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தில், தற்போது, இரண்டு மில்லியன் லிட்டர் மட்டுமே சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இரு தரப்பு கருத்துக்களும் கேட்டறியப்பட்டுள்ளன.இவை மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு சென்று, மாவட்ட கலெக்டர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்கும் வகையில் கூட்டம் நடத்தப்படும். அதன்பின், குழு அமைத்து ஆய்வு செய்து, நல்ல முடிவெடுக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.