உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பஸ்களில் படிக்கட்டு பயணம் இனி இருக்காது! தானியங்கி கதவு பொருத்த நடவடிக்கை

அரசு பஸ்களில் படிக்கட்டு பயணம் இனி இருக்காது! தானியங்கி கதவு பொருத்த நடவடிக்கை

பொள்ளாச்சி ; அரசு போக்குவரத்துக்கழகம், கோவை கோட்டத்தில், மத்திய அரசின் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், டவுன் பஸ் உட்பட 950 பஸ்களில், தானியங்கி கதவு பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில், சாலைகள் மேம்படுத்தப்பட்டு வந்தாலும், விபத்துகளின் எண்ணிக்கை குறையாமலும், உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. வாகன ஓட்டுநர்களின் அஜாக்கிரதையும், போக்குவரத்து விதிமீறல்களும் விபத்துகளுக்கு காரணமாகின்றன.அவ்வகையில், அரசு போக்குவரத்துக்கழகம், விபத்துகளை குறைக்க, சில ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.ரோட்டில் நடந்து செல்வோர், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் பஸ்களின் சக்கரங்களுக்கு இடையே சிக்கி விடாமல் இருக்க, பஸ்களின் இருபுறமும் படிக்கட்டுகளுக்கு இடையே 'அண்டர் ரன் புரொடெக்டர் ஷீட்' அமைக்கப்பட்டு வருகிறது.இதுதவிர, படிக்கட்டு பயணத்தைத்தடுக்க பஸ்களில், தானியங்கி கதவு அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அரசு போக்குவரத்துக்கழகம், கோவை கோட்டத்தில், மத்திய அரசின் 2 கோடி ரூபாய் நிதியில், 950 பஸ்களுக்கு தானியங்கி கதவு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:பெரும்பாலான புது பஸ்களில் தானியங்கி கதவு உள்ளது. அதேநேரம், பழைய பஸ்கள் மற்றும் டவுன் பஸ்களில், கதவு கிடையாது. இதனால், ஆபத்தான முறையில் மாணவர்கள், படியில் தொங்கியவாறு பயணிக்கின்றனர்.ஸ்டாப் வருவதற்கு முன்னரே, பஸ்சில் இருந்து இறங்கிச்செல்கின்றனர். அவ்வப்போது, அவசர கதியில் செல்லும் பெண்களும், இதுபோன்று திடீரென இறங்க முற்படுகின்றனர். சிலர், விபத்தில் சிக்குகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், டவுன் பஸ் உட்பட அனைத்து அரசுப் பஸ்களிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படுகிறது. இதன் வாயிலாக, பஸ்சில் பயணம் செய்யும் மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.தவிர, ஸ்டாப் இருந்தால் மட்டுமே அங்கு பஸ்சை கதவு திறக்க, டிரைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, கண்டக்டர் ஒவ்வொருவரும் ஸ்டாப் வருவதை குரல் வாயிலாக முன்கூட்டியே தெரிவித்து பயணிகளை இறக்க தயார் படுத்துவர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தனியார் பஸ்சிலும் அமைக்கணும்

தொலைதுார ஊர் மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் பல தனியார் பஸ்களில், கதவு கிடையாது. போக்குவரத்து நிபந்தனை மீறியே தனியார் பஸ்களில், அதிகப்படியான பயணியர் ஏற்றப்படுகின்றனர்.இந்த பஸ்களிலும் படியில் தொங்கியவாறு, பயணிகளின் ஆபத்தான பயணம் தொடர்கிறது. அதனால், தனியார் பஸ்களிலும் தானியங்கி கதவு அமைக்கப்படுவதை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை