முத்திரை வாயிலாக பூச்சிக்கொல்லியின் நச்சு தன்மையை அறியலாம்
மேட்டுப்பாளையம்; முத்திரைகள் வாயிலாக பூச்சிக்கொல்லியின் நச்சுதன்மையை அறியலாம் என, தோட்டக்கலை துறை அறிவுறுத்தி உள்ளது. பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டை குறைத்து, கூடுமானவரை இயற்கை உரங்களை பயன்படுத்த சமீப காலமாக தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோவை மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சித்தார்த்தன் கூறியதாவது:-விவசாயத்தில் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தும் போது, அதன் அளவை கட்டுக்குள் வைத்து, பயன்படுத்துவது மிகவும் அவசியம். இல்லை எனில், உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லி அதிகம் கலப்பதால், மக்களின் உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஒருங்கிணைந்த பூச்சி வேளாண்மை முறைகளான, பூச்சிகளின் வளர்ச்சி மற்றும் பரவலை தொடர்ந்து கண்காணிப்பது, பூச்சிகளை உண்ணும் பூச்சிகள் அல்லது ஒட்டுண்ணிகளை பயன்படுத்துவது அவசியம். பூச்சிக்கொல்லிகளின் நச்சுத்தன்மை அளவை அடையாளம் காண்பதற்காக முத்திரைகள் உள்ளன. சிவப்பு முத்திரை மிகவும் நச்சுத்தன்மை, மஞ்சள் முத்திரை அதிக நச்சு தன்மை, நீல முத்திரை மிதமான நச்சுத்தன்மைக்கு ஒட்டப்படுகிறது. பூச்சி கொல்லி பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.--