கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே, விளைச்சல் நிலத்தில் இருந்த வாழையை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன.கிணத்துக்கடவு பகுதியில், தற்போது காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு நேரத்தில் அவை கூட்டமாக விளைச்சல் நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி, சேற்றில் படுத்து உருள்கிறது.இதனால் பெரும்பாலான விவசாயிகள் கடலை சாகுபடி செய்வதை, முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர்.மேலும், சில இடங்களில் விவசாயிகள் பயிர் சாகுபடியை கை விட்டு, தென்னை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர்.இதனால், கிணத்துக்கடவு பகுதியில் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால், காய் வகை பயிர்கள் பயிரிடுவது வேகமாக குறைந்து வருகிறது.இதில், கிணத்துக்கடவுக்கு உட்பட்ட சொலவம்பாளையம் ஊராட்சியில், சண்முகம் என்ற விவசாயி, கடந்த ஆண்டு டிச., ல் தனது நிலத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவில் வாழைக்கன்று நடவு செய்தார்.இந்த வாழைகள் அனைத்தும் தற்போது நன்கு வளர்ந்த நிலையில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் தோட்டத்தில் புகுந்து, வாழையை சேதப்படுத்தி உள்ளது.இதுகுறித்து, விவசாயி சண்முகம் கூறியதாவது: ஒரு ஏக்கர் பரப்பளவில்,1,100வாழை பயிரிட்டு இரண்டரை மாதங்களாக பராமரித்து வரப்பட்டது. இதற்கு நடவு செய்யப்பட்டது முதல், தற்போது வரை 65முதல்70ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டது.ஆனால் கடந்த சில தினங்களாக காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, இரவு நேரத்தில், நுாற்றுக்கணக்கான வாழைகளை ஆங்காங்கே சேதப்படுத்தியுள்ளது.இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், காட்டுப்பன்றிகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.