முறையாக குடிநீர் வினியோகம் இல்லை! மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஜலத்துாரில் முறையாக குடிநீர் வினியோகம் இல்லை எனக்கூறி அப்பகுதி மக்கள், மறியலில் ஈடுபட முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜலத்துாரில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இப்பகுதியில், அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது.கடந்த, இரு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி, காலிக்குடங்களுடன் பொதுமக்கள், பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாசில்தார் வாசுதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார், தாலுகா போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர்.பொதுமக்கள் கூறியதாவது:கடந்த, இரண்டு மாதங்களுக்கு மேலாக, முறையாக குடிநீர் வினியோகம் இல்லை. 10 - 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் குறைவான நேரம் மட்டுமே வழங்குவதால், குடிநீர் தட்டுப்பாடாக உள்ளது.மேலும், குடிநீருடன், கிணற்று நீரையும் கலந்து வினியோகிக்கப்படுகிறது. நீர் சுகாதாரமின்றி இருப்பதால், நோய் பரவும் அபாயம் உள்ளது.இது குறித்து, பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. உரிய நடவடிக்கை எடுத்து, தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, கூறினர்.அதிகாரிகள், முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து சமரசம் அடைந்த மக்கள், 'முறையாக குடிநீர் வினியோகம் இல்லையெனில், போராட்டத்தில் ஈடுபடுவோம்,' என, தெரிவித்தனர்.