வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்ன டெக்னாலஜி வந்தாலும் இந்த கழிசடைகளை திருத்த முடியாது.
தமிழர் திருநாளாம் பொங்கலின் முதல் நாள் போகிப் பண்டிகை. பலரும், பழையன கழிதலே போகி என்ற கருத்தில், குப்பைகளையும், வேண்டாத பொருட்களையும் தீயிட்டுக் கொளுத்துவதை, வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.இன்னும் சிலரே, வேண்டாதவற்றைக் கொளுத்த வேண்டும் என்ற காரணத்துக்காகவே, பழைய டயர்களையும், பிளாஸ்டிக் பொருட்களையும் எரித்து, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றனர்.ஆண்டுதோறும் போகிப் பண்டிகை தினத்தில், புகை மண்டலம் காரணமாக, தெளிவான காட்சிமை இல்லாததால், விமானங்கள் தாமதமாவது வாடிக்கையாகிவிட்டது.நடப்பாண்டும், சர்வதேச விமானங்கள் இந்தியாவுக்கு வரும் நேரத்தை மாற்றி அறிவித்துள்ளன. எனில், எந்த அளவுக்கு நாம் குப்பைகளை எரிக்கிறோம். உண்மையில், ஒரு பண்டிகை தினத்தை தவறான புரிதலால் மாசுபடுத்திக் கொண்டாட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.'பழையன கழிதலும், புதியன புகுதலும் கால வழுவினானே' என்ற பவணந்தி முனிவரின் நன்னூல் சூத்திரத்தை, தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பழையனவற்றை எரிப்பதை, ஓர் ஐதீகமாகவே பின்பற்றி வருவது தவறல்லவா?போகத்துக்கு உரியவனின் விழாவே போகி என்கிறார் கண்ணதாசன். அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் அவர், இதுபற்றி விளக்கமாகவே எழுதியிருக்கிறார்.'பொங்கல் விழா எப்போதும் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அவை முறையே போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல். இந்த நான்கையும் பற்றி பல ஆண்டுகளாகவே பலர் தவறான விளக்கங்கள் கூறி வருகிறார்கள். 'போகி நாள்' என்பதைப் 'போக்கி நாள்' என்கிறார்கள்.அதாவது, வீட்டிலுள்ள கழிவுப் பொருட்களை, பழையனவற்றைப் 'போக்கும் நாள்' என்கிறார்கள். எப்போதுமே சுத்தப்படுத்தும் நாளை, ஒரு திருநாளாக எந்தக் காலத்திலும் கொண்டாடியதில்லை.'போகி' என்ற வார்த்தை தெளிவாகவே இருக்கிறது. விளைச்சல் என்பது, 'போகம்' எனப்படும். போகத்துக்குரியவன் நிலச்சுவான்தார். அதனால்தான் அந்த விழா, நிலம் உள்ளவர்களின் வீட்டில் மட்டும் தடபுடலாக இருக்கும்.போகத்துக்குரியவனின் விழா 'போகி விழா'. வயலில் இறங்கி உழைக்கும் விவசாயிக்கு உள்ள விழா, 'பொங்கல் விழா'. அவனுக்குப் பயன்படும் மாடுகளுக்கான விழா, 'மாட்டுப் பொங்கல்' விழா.அந்த உணவைப் பகிர்ந்து கொள்ளும் நிலமும் இல்லாத, விவசாயமும் செய்யாத பொதுமக்களின் விழா, 'காணும் பொங்கல்' விழா. நிலத்துக்குரியவன், விவசாயி, காளை மாடு, பொதுமக்கள்.நான்கு நாள் விழாவிலும், பொங்கல் என்பது திறந்த இடத்திலேயே வைக்கப்படும்; அதாவது சூரிய வெளிச்சம் படுகிற இடத்தில். அது வானத்துக்குச் செலுத்தும் நன்றி.ஆரோக்கியத்திற்காக எந்தெந்தப் பொருட்களை உபயோகப்படுத்துகிறோமோ, அவை எல்லாம் பொங்கலிலே பயன்படுத்தப்படும்.திருவிழாக்களின் வார்த்தைகளையும், நோக்கங்களையும், அடிப்படைகளையும், புரிந்து கொள்ளாமல் பலர் விளக்கம் கூறி விடுகிறார்கள்' என்கிறார் கண்ணதாசன்.தவறான கற்பிதங்களைக் களைவோம். மாசற்ற பண்டிகையாக, புகையில்லா போகிப் பண்டிகையைக் கொண்டாடுவோம்!
என்ன டெக்னாலஜி வந்தாலும் இந்த கழிசடைகளை திருத்த முடியாது.