உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 3 ஆண்டுகளாக போராடும் நெசவாளர்களை இப்பத்தான் நினைக்கறாங்க! தேர்தலில் வாக்குறுதி மட்டும் கொடுங்கறாங்க

3 ஆண்டுகளாக போராடும் நெசவாளர்களை இப்பத்தான் நினைக்கறாங்க! தேர்தலில் வாக்குறுதி மட்டும் கொடுங்கறாங்க

பொள்ளாச்சி : 'தேர்தல் நேரத்தில் மட்டும் தான் நினைவுக்கு வருகிறோம். மற்ற நேரங்களில், எங்களை மறந்துவிடுகின்றனர். மூன்று ஆண்டுகளாக போராடியும் நெசவுத்தொழில் பாதிப்புக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை,' என நெசவாளர்கள் கவலை தெரிவித்தனர்.தென்னைக்கு பெயர் பெற்ற பொள்ளாச்சியில், கைத்தறி நெசவும் தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. நெகமம், குள்ளக்காபாளயம், சமத்துார், வக்கம்பாளையம், குஞ்சிபாளையம், நாயக்கன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், கைத்தறி நெசவுத்தொழிலில் அதிகப்படியானோர் ஈடுபட்டுள்ளனர்.கடந்த, மூன்று ஆண்டுகளாக இத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நெசவாளர்கள், தங்களது பிரச்னைகளை அரசுக்கு எடுத்துரைத்தும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியம் தீர்வு எட்டப்படாமல் உள்ளது.தேர்தல் நேரத்தில் மட்டும், நெசவாளர்கள் பிரச்னை அரசு மற்றும் அரசியல்வாதிகள் கவனத்தை ஈர்க்கிறது. அதன்பின், மறந்து விடுவதாகவும் நெசவாளர்கள் கவலை தெரிவித்தனர்.கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது: நுால் விலையேற்றம் காரணமாக, வாரம் ஒரு சேலை உற்பத்தி செய்ய மட்டுமே, முதலாளிகள் பட்டு நுால் தருகின்றனர். கைத்தறி சேலைகள் விற்பனையாகாததால், நெசவாளர்களுக்கு கூலி பணம் தருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.பாரம்பரியம் மிக்க இத்தொழில், குடும்ப தொழிலாக உள்ளது. வாழ்வாதாரம் காக்க அரசுக்கு எங்களது பிரச்னைகளை தெரிவிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.கைத்தறி ரக ஒதுக்கீட்டு சட்டம், 1985ன் கீழ், ஒதுக்கப்பட்ட, 11 ரகங்களை பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு, கோரப்பட்டு, வேட்டி, துண்டு, லுங்கி, ஜமக்காளம் போன்றவற்றை விசைத்தறியில் உற்பத்தி செய்ய அனுமதிக்க கூடாது.கைத்தறி ரகங்களுக்கு விதிக்கப்பட்ட ஐந்து சதவீத ஜி.எஸ்.டி., வரியை நீக்க வேண்டும். பட்டு மற்றும் நுால் விலை உயர்வை கட்டுப்படுத்தி ஒரே சீராக இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேக்கமடைந்த கைத்தறி துணிகளை, அரசு கொள்முதல் செய்து விற்க முன்வர வேண்டும். அரசு அலுவலர்கள், ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் வாரம் ஒரு முறையாவது, கைத்தறி துணிகளை பயன்படுத்த அரசாணையிட வேண்டும்.கைத்தறி நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கிகளை ஏற்படுத்த வேண்டும். தனியார் கைத்தறி நெசவாளர்களுக்கு, கைத்தறி சங்கம் வாயிலாக பட்டு சேலை, நுால் சேலைகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவையுள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.கடந்த, மூன்று ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்னைக்கு எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. தற்போது, தேர்தல் நெருங்கியுள்ள நேரத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., இரு கட்சிகளும் நெசவு தொழிலை காப்பாற்றுவோம் என, தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளன.தேர்தலின் போது மட்டும், பிரச்னைகள் பற்றி பேசி விட்டு மற்ற நேரத்தில் மறந்து விடுவது வேதனையாக உள்ளது. காகித அறிக்கையாக இல்லாமல், உரிய நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

சோதனையால் தொழில் பாதிப்பு!

தேர்தல் காலம் என்பதால், பணம் எடுத்து வருவதில் வியாபாரிகளுக்கு சிரமம் உள்ளது. பணம் எடுத்து வந்தால் அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுவதால் தொழில் பாதிக்கப்படுகிறது. இதனால், நெசவுத்தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக நெசவாளர்கள் தெரிவித்தனர்.இந்த பிரச்னை குறித்து, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆலோசித்து, சரியான வழிகாட்டுதல்களை அறிவிக்க வேண்டும். தொழில் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க, தேர்தல் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுவினருக்கு உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி