போலீசாக நடித்து கொள்ளையடிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர் உட்பட மூவர் கைது தலைமறைவாக உள்ள இருவருக்கு வலை
வடவள்ளி; கோவையில், வீட்டுக்குள் புகுந்து, போலீஸ் என கூறி, கொள்ளையடிக்க முயன்ற வழக்கில், முன்னாள் ராணுவ வீரர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். கோவை, கஸ்துாரி நாயக்கன்பாளையம், சபரி அவென்யூவை சேர்ந்தவர் செந்தில்குமார், 40; 'சிசி டிவி' கேமரா பொருத்தும் பணி செய்கிறார். வீட்டில், இவர் மட்டும் தனியாக வசிக்கிறார். 12ம் தேதி வீட்டில் இருந்தபோது இருவர் வந்தனர். போலீசார் எனக்கூறி, அடையாள அட்டை காட்டியுள்ளனர். செந்தில்குமாரிடம், 'வங்கி பரிமாற்றங்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும். ஸ்டேஷனுக்கு வாருங்கள்' என கூறியுள்ளனர். சந்தேகமடைந்த அவர், அறைக்குள் சென்று கதவை தாழிட்டு, போனில் நண்பருக்கு தகவல் தெரிவித்தார். வீட்டுக்குள் சிக்கியிருந்த இருவர், பயத்தில் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது, ஜீப்பில் வந்த மூவர் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, கோவையைச் சேர்ந்த விஷ்ணுகுமார்,40, ஜிம்சன்,41, கார்த்திக்,40 ஆகியோர் என்பதும், செந்தில்குமாரிடம் போலீஸ் என கூறி கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது. இதில், ஜிம்சன், முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து விசாரித்தபோது, விஷ்ணுகுமாருக்கும், செந்தில்குமாருக்கும் மது பாரில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. செந்தில்குமார் தனியாக இருப்பதும், அவரிடம் பணம் இருப்பது குறித்தும் விஷ்ணுகுமார் நண்பர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, விஷ்ணுகுமார், கார்த்திக், ஜிம்சன், சந்தோஷ் மற்றும் பாரதி என்ற பெண் உட்பட ஐந்து பேர் சேர்ந்து திட்டமிட்டு, கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். போலியாக போலீஸ் அடையாள அட்டை தயாரித்ததும், இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் கண்டறியப்பட்டது. கார்த்திக், ஜிம்சன், விஷ்ணுகுமார் ஆகியோரை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பாரதி, சந்தோஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.