கத்தியை காட்டி பணம் பறித்த மூவருக்கு சிறை
கோவை: குனியமுத்துார் நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் சதாம் உசைன், 29; கால் டாக்சி தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் சினிமா பார்த்து விட்டு, திருச்சி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மூவர் அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, பணம் கேட்டனர். பணம் இல்லை எனத் தெரிவித்ததும், தகாத வார்த்தைகளால் திட்டினர். தொடர்ந்து, அவரது சட்டை பையில் இருந்த ரூ.1,500 ஐ பறித்து தப்பினர். சதாம் உசைன் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பணம் பறிப்பில் ஈடுபட்டவர்களின் வாகனம் குறித்து தெரிந்தது. அதன் அடிப்படையில், துாத்துக்குடி மாவட்டம் ஓட்டனாட்டத்தை சேர்ந்த சுகுமார், 29, கோவை வடவள்ளியை சேர்ந்த நாகராஜமூர்த்தி, 21, தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த முத்துவிஜய், 23 ஆகியோரை சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, கத்தி, பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.