பலரிடம் ஆன்லைன் மோசடி அரங்கேற்றிய வங்கி பெண் ஊழியர் உட்பட மூவர் கைது
கோவை;நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பலரிடம், ரூ. 90 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்த வங்கி ஊழியர் உட்பட மூவரை, கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.கோவை, கணபதியை சேர்ந்தவர் ஜோஜூ மேத்யூ, 51; ஆன்லைன் வர்த்தக ஆலோசனை நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஜன., மாதம் இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தங்களின் 'பின் பண்ட்' என்ற நிறுனத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெற முடியும் என கூறினர். தொடர்ந்து, அவரது மொபைல் எண்ணை, 'நெ.999 பின் வெல்த் திங்க் டாங்க்' என்ற 'வாட்ஸ் அப்' குழுவில் சேர்த்தனர். தங்களின் நிறுவனம் 'செபி'யில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்பதால், அச்சமின்றி முதலீடு செய்யலாம் என கூறினர்.இதை நம்பி ஜோஜூ மேத்யூ, ரூ.50 லட்சம் முதலீடு செய்தார். ஆனால் அந்த பணத்தை ஜோஜூ எடுக்க முயன்ற போது முடியவில்லை. அவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடி நபர்களை தேடி வந்தனர்.இந்நிலையில், அவர்களின் மொபைல் எண், வங்கி கணக்கு விவரங்களை வைத்து விசாரித்தனர். அப்போது, மோசடியில் ஈடுபட்டது பெங்களூருவை சேர்ந்த சிவக்குமார், 27, ஒசூரை சேர்ந்த குமரேசன், 29 மற்றும் நித்யா, 32 என்பது தெரியவந்தது. இதில், நித்யா தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்த போது, அவர்கள் இதுவரை 96 பேரிடம் ரூ.90 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து, 5 மொபைல், 9 சிம் கார்டுகள், 25 ஏ.டி.எம்., கார்டுகள், 25 வங்கி கணக்கு புத்தகங்கள், 62 காசோலை புத்தகங்கள், க்யூ.ஆர்., ஸ்கேனர், பில் புக் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.