| ADDED : மார் 03, 2024 10:31 PM
ஆனைமலை:ஆனைமலை அருகே ஆழியாறு ஆற்றில், தடையை மீறி சுற்றுலாப்பயணியர் குளிப்பது தொடர்கதையாகியுள்ளது.ஆனைமலை அருகே ஆழியாறு சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்குள்ள அணை, பூங்கா மற்றும் கவியருவி காண உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர் சுற்றுலாப்பயணிகளும் அதிகளவு வந்து செல்கின்றனர்.ஆழியாறு பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணியர், அங்குள்ள ஆழியாறு பள்ளி வளங்கன் அணைக்கட்டுப்பகுதியில் குளிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.தற்போது கவியருவிக்கு நீர் வரத்து குறைந்துள்ள சூழலில், அதிகளவு சுற்றுலாப்பயணியர், அணைக்கட்டு பகுதியில் குவிந்து வருகின்றனர்.விடுமுறை நாளான நேற்று அதிகளவு சுற்றுலாப்பயணியர் ஆபத்தை உணராமல் அணைக்கட்டு பகுதியில் குளித்தனர்.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அணைக்கட்டுப்பகுதியில், அடிக்கடி உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. இதைத்தடுக்க எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.அதையும் தாண்டி சுற்றுலாப்பயணியர், ஆர்வ மிகுதியில் குடும்பத்துடன், சுழல், புதைமணல் உள்ள பகுதி என அறியாமல் குளிக்கின்றனர். இதனால், வீண் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, இப்பகுதிக்கு செல்லாமல் இருக்க, தடுப்பு கம்பிகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.