சீதோஷ்ண மாற்றத்தால் பனிமூட்டம்; கண்டு ரசிக்கும் சுற்றுலாபயணியர்
வால்பாறை; சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வால்பாறையில் நிலவும் பனி மூட்டத்தை சுற்றுலாபயணியர் வெகுவாக கண்டு ரசித்தனர்.வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், எஸ்டேட் பகுதியில், காலை, மாலை நேரங்களில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. தேயிலை செடிகள் மீது பனி படர்ந்து ரம்யமாக காட்சியளிக்கிறது. இதே போல் வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் ரோட்டில் கவர்க்கல், வாட்டர்பால்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை நேரத்தில் நிலவும் பனிமூட்டத்தால், வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்கு எரியவிட்டுச்செல்கின்றனர்.ஆழியாறு - வால்பாறை மலைப்பாதையில், நிலவும் பனிமூட்டத்தை வாகனங்களில் வரும் சுற்றுலாபயணியர் பயணம் செய்தபடி கண்டு ரசிக்கின்றனர். அவர்களின் மனம் கவர்ந்த நல்லமுடி காட்சி முனைப்பகுதியிலும் கண்டு மகிழ்கின்றனர்.இதனிடையே எஸ்டேட் பகுதியில் அதிகாலை நேரத்தில் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பனி மூட்டத்தால், எதிரே வனவிலங்குகள் வருவதை கூட அறிய முடியாத நிலையில், பணியில் ஈடுபடமுடியாமல் தவிக்கின்றனர்.