புல்லுக்காட்டில் கடை அமைக்க இடம் வேண்டும்; மக்கள் குறைதீர் கூட்டத்தில் வியாபாரிகள் மனு
கோவை; மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம், மேயர் ரங்கநாயகி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் சார்ந்த, 77 மனுக்கள் பெறப்பட்டன. தண்ணீர் வேண்டும்
தாமஸ் வீதி மக்கள் அளித்த மனுவில், 'தாமஸ் வீதி, தெலுங்கு வீதி சந்திப்பில் இருக்கும் மாரியம்மன் கோவில் அருகே, பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்திவரும் பொது குடிநீர் குழாயில் தண்ணீர் நிறுத்தி வைத்துள்ளனர். குழாயில் நீர் திறக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர். நடைபாதை வேண்டும்
கணபதி மாநகர் சமூக நலச்சங்கத்தினர் மனுவில், 'மாநகராட்சி, 20வது வார்டு கணபதி மாநகரில் இரண்டாவது பிளாக் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவில், மேல்நிலை தண்ணீர் தொட்டிக்கு வரும் தண்ணீரை நிறுத்தி வைத்துள்ளனர். தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். அதேபோல், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் பாதசாரிகள் நடப்பதற்கு உரிய நடைபாதை அமைத்து தருவதுடன், அது ஆக்கிரமிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர். பழைய கட்டணத்தை அனுமதிக்கணும்
கோவை அண்ணா மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் மனுவில், 'அண்ணா மார்க்கெட்டை, 476 குடும்பங்கள் நேரடியாகவும், 524 குடும்பங்கள் மறைமுகமாகவும் நம்பியுள்ளனர். மார்க்கெட் தற்போது புனரமைக்கப்பட்டு வருகிறது. 476 கடைகளில், 81 கடைகள் மட்டும் புனரமைக்கப்பட்டுள்ளது.மீதி கடைகள் புனரமைக்கப்படாத நிலையில், மாநகராட்சியானது மொத்த கடைகளையும் பொது ஏலம் விட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், நாங்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவோம். சில்லரை வியாபாரத்தை மட்டுமே நம்பியுள்ள நாங்கள், தற்போது நடைமுறையில் உள்ள தினசரி சுங்க கட்டணத்தையே, தொடர்ந்து செலுத்த அனுமதிக்க வேண்டுகிறோம்' என, தெரிவித்துள்ளனர். கடைக்கு நிலம் வேண்டும்
தியாகி குமரன் மார்க்கெட் காய்கனி சிறு வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மனுவில்,'காய் கனி விற்பனை செய்யும் கடையை, 88 பேர் நடத்தி வந்தோம். இந்நிலையில் எங்கள் கடைகள் நீதிமன்ற உத்தரவு வாயிலாக அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, புல்லுக்காடு பகுதியில் கடை ஒதுக்கி தருமாறு கோரியதின் அடிப்படையில், 2023ம் ஆண்டு மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவரை குறிப்பிட்ட இடத்தில், கடை அமைப்பதற்கு இடம் ஒதுக்கி தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, கடைகளை அமைத்திட நிலம் ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்' என, தெரிவித்துள்ளனர். தார் ரோடு வேண்டும்
ஸ்ரீ சவுடேஸ்வரி நகர் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில்,'எங்கள் நகரில், 40 குடும்பங்கள் வசித்து வருகிறோம். 'வீட்டு வரி உள்ளிட்டவை செலுத்தி வருகிறோம். ஆனால், மண் சாலைகளில் தார் ரோடு அமைத்து தராததால், பெரும் சிரமங்களை சந்திக்கிறோம். 'குடிநீர், தெருவிளக்கு, பாதாள சாக்கடை வசதிகளையும் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்' என, தெரிவித்துள்ளனர்.