சுற்றுச்சூழல் உணர்திறன் மசோதாவை ரத்து செய்ய வியாபாரிகள் வலியுறுத்தல்
வால்பாறை; சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல மசோதாவை ரத்து செய்யக்கோரி, விரைவில் போராட்டம் நடத்தப்போவதாக வியாபாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெபராஜ், பொதுசெயலாளர் ஷாஜூஜார்ஜ், பொருளாளர் ஏசுதாஸ் ஆகியோர் அறிக்கை வருமாறு:வளமையான வனம், உயிரினங்கள், நீர் ஆதாரம், நதிகள் ஆகியவற்றை எதிர்காலங்களில் மாசில்லாமல் பேணிக்காக்கவும், இயற்கையுடன் இணைந்து மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் பழக்கத்தை கொண்டு வருதல் உள்ளிட்ட கருத்துகளை முன்னிருத்தி, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல மசோதா வரைவு அறிக்கை கொண்டு வரப்பட்டுள்ளது.தமிழக அரசின் முதன்மை அதிகாரி ராஜேஸ்குமார் டோக்கரா தலைமையிலான நிபுணர் குழுவினர், சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல மசோதா வரைவு அறிக்கையை தமிழக அரசின் சட்ட முன் வடிவுக்காக பரிந்துரை செய்து தாக்கல் செய்துள்ளனர்.தமிழகத்தில் வால்பாறை உள்ளிட்ட, 83 கிராமங்களில், இந்த மசோதா தாக்கல் செய்த பின் அதனை சட்ட வடிவாக்கி நடைமுறைப்படுத்துவது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால், வால்பாறையில் அனைத்து சுற்றுலா திட்டங்களும் முடக்கப்படும். வால்பாறை நகரை தவிர பிற பகுதிகளுக்கு சுற்றுலா பயணியர் செல்ல அனுமதிக்கமாட்டார்கள்.நகராட்சி சார்பில், வால்பாறை நகரில் மட்டுமே வளர்ச்சிப்பணி மேற்க்கொள்ளப்படும். எஸ்டேட் பகுதியில் எந்த வளர்ச்சிப்பணியும் நடக்காது. எனவே இந்த மசோதாவை ரத்து செய்யக்கோரி, வால்பாறை மக்களை ஒன்று திரட்டி விரைவில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.