சாலை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல்; தேவையான இடங்களில் சிக்னல் அவசியம்
பொள்ளாச்சி ; பொள்ளாச்சி நகரில் உள்ள ரோடுகளில், வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தேவையான இடங்களில், சிக்னல் அமைக்க வேண்டும்.பொள்ளாச்சி நகரில், வாகன போக்குவரத்து அபரிமிதமாக உள்ளது. அதற்கேற்ப, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. குறுகிய ரோடுகளில் இருபுறமும் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.ரோடு குறித்து ஆய்வு செய்து, குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் 'பார்க்கிங் ஏரியா'வாக அறிவித்து, கண்காணிக்க வேண்டும். கோவை ரோடு அகலமான ரோடாக இருந்தாலும், வாகனங்கள் தாறுமாறாக இயக்கப்படுகின்றன.அனைத்து ரோடுகளிலும், மக்கள் அதிகமாக வந்து செல்லும் கடைகள் அதிகமுள்ள ரோடுகளிலும், ஆட்டோ, வேன், லாரி ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஸ்டாண்டுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும்.பஸ் ஸ்டாப்புகளிலும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. பல இடங்களில், சந்திப்பு ரோடுகள் ஒட்டியே ஸ்டாப் இருப்பதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.சரியான இடங்கள் தேர்வு செய்து, நிழற்கூரை அமைத்து, பஸ்கள் தாறுமாறாக நிற்பதை தடுக்க வேண்டும். அதேபோல, சாலை சந்திப்புகளில் தாறுமாறாக வாகனங்கள் இயக்கப்படுவதை தடுக்க, சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:மக்கள் அதிகமாக ரோடுகளை கடக்கும் பகுதிகளில், நடை மேம்பாலங்கள் அமைக்கவும், ரோட்டோரங்களில் இருக்கும் மின்கம்பங்களை அகற்றி, பூமிக்கடியில் மின் ஒயர் கொண்டு செல்லவும் முயற்சிக்க வேண்டும்.ரோடுகளின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை, பாரபட்சமில்லாமல் அகற்ற வேண்டும். ரோடு சந்திப்புகள், திருப்பங்களில் தேவையான அனைத்து இடங்களிலும் சிக்னல் அமைக்க வேண்டும்.ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்ட ரோடுகளில், நடக்கும் விதிமீறல்கள் குறித்து கண்காணிக்க வேண்டும். துறை ரீதியனா அதிகாரிகளின் நடவடிக்கை அவசியம்.சப்-கலெக்டர் தலைமையில் போக்குவரத்து சீராய்வு கமிட்டி அமைத்து, சிறப்பு கவனம் எடுத்து, நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.