மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்; சரக்கு ரயில் தீ விபத்து எதிரொலி
கோவை; திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து எதிரொலியாக, ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன் சில ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்பட்டன.சென்னை துறைமுகத்தில் இருந்து, 52 டேங்கர்களில் எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் அருகே தடம் புரண்டதால் தீ விபத்து ஏற்பட்டது.விபத்து காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட வேண்டிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.அதன்படி, கோவை - எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல்(12676) கோவை எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ்(12244) ஆகிய இரு ரயில்கள், முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. கோவை - சென்னை சென்ட்ரல்(20644) வந்தேபாரத், கோவை - சென்னை சென்ட்ரல்(12680) இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள், சேலத்துடன் ரத்து செய்யப்பட்டன. மங்களூர் - சென்னை சென்ட்ரல்(22638) வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ், காட்பாடி வரை இயக்கப்பட்டது. பல்வேறு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. கோவை ரயில்வே ஸ்டேஷனில், ரயில்கள் இயக்கம் குறித்து பயணிகள் அறிந்து கொள்ள உதவிமையம் ஏற்படுத்தப்பட்டது.ஆன்லைன் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு, கட்டண தொகை தானாக திருப்பி வழங்கப்பட்டது. ரயில்வே ஸ்டேஷனில் நேரடியாக டிக்கெட் பெற்றவர்களுக்கு, கவுன்ட்டரில் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது.