பலத்த காற்றில் சாயும் மரங்கள் காய்ந்த மரங்களை அகற்றணும்
தொண்டாமுத்தூர்; கோவை புறநகரில் முக்கிய சாலையோரங்களில் உள்ள காய்ந்த மரங்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.கோவை மேற்கு புறநகர் பகுதியில், சிறுவாணி சாலை, தொண்டாமுத்தூர் சாலை, மருதமலை சாலை ஆகியவை முக்கிய சாலைகளாக உள்ளன. தொண்டாமுத்தூர் சுற்றுப்பகுதியில், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், தொழில் சாலைகள், ஆன்மிக ஸ்தலங்கள், சுற்றுலாத்தலங்கள் உள்ளதால், இச்சாலைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த ஒரு வாரமாகவே, இப்பகுதியில், பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், பல இடங்களிலும், மரங்கள் முறிந்து விழுகின்றன. ஆடி மாதத்தில், காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்பதால், முக்கிய சாலைகளின் ஓரத்தில், காய்ந்த நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.