மூதாட்டியை கொன்ற இருவருக்கு இரண்டு நாள் போலீஸ் காவல்
அன்னுார்: மூதாட்டியைக் கொன்று, பின்னர் கணவரை கொல்ல முயற்சித்த, இளம் பெண் மற்றும் காதலனை அன்னூர் போலீசார் காவலில் எடுத்துள்ளனர். கஞ்சப்பள்ளியைச் சேர்ந்தவர் லோகேந்திரன், 33. பைனான்சியர். இவரது மனைவி ஜாய் மெட்டில்டா, 27. ஜாய் மெட்டில்டாவுக்கும், கர்நாடகாவைச் சேர்ந்த நாகேஷ், 25. என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து லோகேந்திரனின் பாட்டி மயிலாத்தாளை கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்து கஞ்சப்பள்ளி பகுதியில் புதைத்து விட்டனர். பின்னர் கடந்த மாதம் கணவரை கொல்ல முயற்சித்த போது இருவரும் பிடிபட்டனர். இருவரும் கைது செய்யப் பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந் நிலையில் இவர்கள் மூதாட்டியை கொலை செய்தது எப்படி என்பதை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க இருவரையும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரினர். கோவை மத்திய சிறையில் இருந்த நாகேஷ் மற்றும் ஜாய் மெட்டில்டா இருவரும் அன்னுார் கோர்ட்டுக்கு கொண்டுவரப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் அன்னுார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அன்னுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார், ஜாய் மெட்டில்டா மற்றும் நாகேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வருகிற 13ம் தேதி மீண்டும் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.