மேட்டுப்பாளையம்: கிராம மக்களை தொழில் முனைவோராக மாற்ற, காரமடை அடுத்த பெள்ளாதியில், கிராம புத்தொழில் குழு துவக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின்கீழ், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (ஸ்டார்ட் அப் டிஎன்) செயல்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், கிராமம் தோறும் புத்தொழில் திட்டத்தில், தொழில் துவங்கச் செய்து, வேலைவாய்ப்பை உருவாக்குவது. காரமடை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெள்ளாதி கிராமம், புத்தொழில் குழு துவங்க தேர்வு செய்யப்பட்டது. இதன் துவக்க விழா ஆலாங்கொம்பு அரங்கநாதர் உழவர் உற்பத்தி நிறுவன விற்பனை கூடத்தில் நடந்தது. அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். தலைமை செயல் அலுவலர் ராஜு வரவேற்றார். கோவை வட்டார ஸ்டார்ட் அப் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் காயத்ரி, கிராம புத்தொழில் குழுவை துவக்கி வைத்து பேசியதாவது: கிராம இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், தொழில் முனைவு சூழலை உருவாக்குவதே, இக்குழுவின் நோக்கம். இதில் இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் கிராம மகளிர் ஒன்றிணைந்து தொழில் துவங்கலாம். அதற்காக யோசனைகள், வடிவமைப்பு, முன்மாதிரி தயாரிப்பு, வழிகாட்டுதல், ஆரம்பகட்ட தொழில் முனைவுக்கு ஆதரவு, உற்பத்தி செய்த பொருள்கள் சந்தையில் விற்பனை செய்தல் குறித்து ஆலோசனை வழங்கப்படும். காரமடை சக்தி இன்ஜினியரிங் கல்லூரியில், தொழில்நுட்ப ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் தொழில் துவங்குவதால், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். அதோடு தனி நபர் வருவாயும் உயரும். எனவே கூட்டாகவோ, தனியாகவோ தொழில் துவங்க, தொழில் முனைவோர் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சக்தி இன்ஜினியரிங் கல்லூரி இன்குபேஷன் மேலாளர் கவுதம், தொழில் முனைவோருக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் குறித்து பேசினார். 'அறம்' ஆர்கானிக் விவசாயக் குழும இயக்குனர் சுகிலா, மத்திய வேளாண் விஞ்ஞானி கோமதி, வேளாண் வணிகத்துறை உதவி வேளாண் அலுவலர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.