விநாயகர் சதுர்த்தி விழா; போலீஸ் கொடி அணிவகுப்பு; சிலை விசர்ஜனம் செய்யும் இடத்தில் ஆய்வு
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், 233 இடங்களிலும், ஆனைமலையில், 300 இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவில், பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்படும். மூன்று நாட்களுக்குப் பின், சிலைகள் நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. அவ்வகையில், நாளை, பொள்ளாச்சியில், 233 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு வைக்கப்படவுள்ளது. அதில், சூளேஸ்வரன்பட்டி செம்பேகவுண்டன்காலனி பிரச்னைக்குரிய பகுதியாக கண்டறியப்பட்டு, பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதேபோல, வால்பாறை, ஆனைமலையில் 300 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படவுள்ள நிலையில், பிரச்னைக்குரிய நெல்லுக்குத்திபாறை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. மேலும், விநாயகர் சிலைகளை, அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆறு, மற்றும் கெடிமேடு வாய்க்காலில் மட்டுமே கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும், 29ல், பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகிறது. 30ல், ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் சார்பில் கூட்டம் நடத்தி, ஊர்வலமாக விநாயகர் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு, அம்பராம்பாளையம் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், கோவை டி.ஐ.ஜி., சசிமோகன், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் விசர்ஜனம் செய்யும் இடங்களில் ஆய்வு செய்தார். ஏ.எஸ்.பி., சிருஷ்டிசிங், டி.எஸ்.பி., பவித்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர். போலீஸ் அணிவகுப்பு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை, விசர்ஜனத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், போலீசாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் ஏ.எஸ்.பி. சிருஷ்டிசிங், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் ஊர்காவல்படை, ஆயுதப்படை போலீசார், பேரிடர் மீட்பு போலீசார் என, 200க்கும் மேற்பட்டவர்கள், அணிவகுப்பில் பங்கேற்றனர். பொள்ளாச்சி மரப்பேட்டையில் துவங்கிய அணிவகுப்பு, எஸ்.எஸ்.கோவில் வீதி, வெங்கட்ரமணன் வீதி, பாலக்காடு ரோடு வழியாக சென்று பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. எஸ்.பி., கார்த்திகேயன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா, அமைதியாக நடைபெற அனைத்து வகையான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 1,500 விநாயர்கள் சிலைகள், பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. எட்டு இடங்களில் சிலை கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 47 இடங்களில் விசர்ஜன ஊர்வலம் நடத்தப்படவுள்ளது. குறிப்பாக, 29ம் தேதி, அதிகப்படியான சிலைகள் கரைக்கப்படும். மேட்டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி, காரமடை உள்ளிட்ட இடங்களில் அதிகமான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. அதனால், இரண்டாயிரம் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். ஊர்வலம் செல்லும் வழித்தடத்தில் கூடுதலான கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க, சிலை வைக்கும் ஒருங்கிணைப்பாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, எஸ்.பி., கூறினார்.