தொழிற்சங்க தேர்தலில் விதிமீறல்; தொ.மு.ச. புகார்
கோவில்பாளையம்; தி.மு.க., தொழிற்சங்க தேர்தலில் விதிமீறல் நடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக்கழக கிளைகளில், தி.மு.க.,வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., செயல் பட்டு வருகிறது. கடந்த செப். 29ம் தேதி அனைத்து கிளைகளிலும் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் உக்கடம் கிளையில் நடைபெற்ற தேர்தலில் பெரியசாமி என்பவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் கோவை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் மீனாவின் கணவர் லோகுவின் சகோதரர் ஆவார். மத்திய சங்கத் தேர்தலில் பெரியசாமி போட்டியிட முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர், தலைமைக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். இதில், 'கிளை தேர்தலில், தோல்வி அடைந்தவர்கள் மத்திய சங்கத்தின் பொறுப்புக்கு வரக்கூடாது என தொ.மு.ச., பேரவை விதி உள்ளது. எனினும் பெரியசாமி தன்னுடைய அரசியல் பலத்தால், விதிகளை மீறி, மத்திய சங்கத்தில் பொறுப்பு பெற முயற்சி வருகிறார். முக்கிய தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். கிளையில் தோல்வி அடைந்தவர்கள் மத்திய சங்கத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.