உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வார்டு பொதுமக்கள் கண்ணீர்

வார்டு பொதுமக்கள் கண்ணீர்

மா நகராட்சி வடக்கு மண்டலம், 26வது வார்டில் வி.கே.ரோடு, எல்லைத் தோட்டம் ரோடு, பயனீர் மில் ரோடு, பி.கே.டி. நகர், ஹட்கோ காலனி மெயின் ரோடு, காவலர் குடியிருப்பு, பட்டாளம்மன் கோவில் வீதி, செங்காளியப்பன் நகர், முருகன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் துக்கினார் வீதி, ரங்கம்மாள் வீதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட ரோடு புனரமைக்கப்படாததால், மக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர். பீளமேடு ரயில்வே பாலத்தின் கீழ், கருப்பண்ண கவுண்டர் லே-அவுட்டில் இருக்கும் 'டாஸ்மாக்' மதுக்கடையை அகற்ற, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இங்கு மது குடித்துவிட்டு ரயில் தண்டவாளத்தை கடப்பவர்கள் உயிரிழப்பது தொடர்கிறது. காலை, மாலை நேரங்களில், பள்ளி மாணவர்கள் இந்த தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடக்கின்றனர். எனவே, ரயில்வே பாலத்தின்கீழ் சுரங்கப்பாதை தேவை என்பது, பிரதான கோரிக்கை. பெருக்கெடுக்கும் கழிவுநீர் பட்டாளம்மன் கோவில் வீதி, விளாங்குறிச்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பிரதான சாக்கடை வழியாக வரும் கழிவுநீர், தாழ்வான அண்ணாதுரை காலனி குடியிருப்புகளுக்குள் புகுகிறது. சிறு மழை பெய்தாலே உள்ளே இருக்க முடியாது. சாக்கடை கால்வாயை ஆழப்படுத்துவதுடன், அவிநாசி ரோட்டை ஒட்டி, இக்கழிவுநீர் செல்லும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தித்தர வேண்டும். -ரவி (சுயதொழில்) நேரு நகரில் சாக்கடை வசதி இல்லாத இடங்களில் கட்டித்தர வேண்டும். கழிவுநீர் 'ரிவர்ஸ்' எடுத்து வீட்டு கழிவறைகளுக்குள் தேங்குகிறது; துர்நாற்றம் தாங்க முடிவதில்லை. கொசு தொல்லையும் இங்கு அதிகம். இப்பகுதி முழுவதும் சாக்கடை கழிவுநீர் செல்ல கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். -செல்வி (இல்லத்தரசி)மின்கம்பத்தால் திக்... திக்... எல்லைத்தோட்டம் 4வது வீதியில் சாக்கடைக்கு நடுவே, மின் கம்பம் நிறுவப்பட்டுள்ளது. இதனால் அடைப்பு ஏற்பட்டு, இங்குள்ள குடியிருப்புகளுக்குள் கழிவுநீர் புகுந்துவிடுகிறது. தினமும் தண்ணீரை ஊற்றி அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. சாக்கடை வாட்டமாகவும் இல்லை. மின் கம்பத்தை அகற்றுமாறு முறையிட்டால், மின் வாரிய அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. -கலையரசி (இல்லத்தரசி) பாலகுரு கார்டனில் இருந்து பி.எப்.குடியிருப்பு வழியாக அவிநாசி ரோட்டை, 200 மீட்டரில் அடைந்துவிடலாம். ரோடு அமைப்பதற்கான இடத்தை தனியார் சிலர் வழங்க முன்வந்துள்ளனர். வருங்கால வைப்புநிதி அதிகாரிகளுடன் மாநகராட்சி நிர்வாகம் பேசி இடத்தை பெற்று, திட்டசாலை அமைத்தால், சுற்றி அலைய வேண்டியதில்லை. -பாலன் (கார் ஒர்க் ஷாப்) ராஜிவ் நாயுடு லே-அவுட்டில் மழைநீர், சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு, 50 ஆண்டுகளாக வசதி இல்லை. மழை காலத்தில் சிரமங்களை சந்திக்கிறோம். 200 மீட்டரில் செங்காளியப்பன் நகரை கடக்கும் கால்வாயில் கழிவுநீர் செல்ல, குழாய் அமைத்தாலே போதுமானது. - முத்து வாசுகிநாதன் (பார்மஸி பணி)அடுக்குமாடி குடியிருப்பு பயனீர் மில் ரோட்டில் உள்ள துாய்மை பணியாளர் குடியிருப்பில், 24 வீடுகள் முன்பு இருந்தது. தற்போது, 108 ஆக குடும்பங்கள் அதிகரித்துள்ளன. மின் வசதி போதியளவில் இல்லை; குடிநீர் குழாய் இரண்டு மட்டுமே உள்ளது. தங்க இடம் இல்லாததால் இரவில் வெளியே துாங்குகிறோம். வயதுக்கு வந்த பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு பயமாக இருக்கிறது. இங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். - சரஸ்வதி (துாய்மை பணியாளர்)

என்ன சொல்கிறார் கவுன்சிலர்?

வார்டு கவுன்சிலர் சித்ரா (ம.தி.மு.க.,) கூறியதாவது: n ராஜிவ் நாயுடு லே-அவுட்டில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீர், மழைநீர் வெளியேறும் வசதி இல்லை. இந்த வசதிகளை ஏற்படுத்த ரூ.7.5 லட்சம்நிதி ஒதுக்கப்பட்டது. ஒப்பந்தம் எடுத்தவர்கள் பணிகளை துவங்காமல் உள்ளனர். n எல்லைத்தோட்டம் நான்காவது வீதியில் உள்ள சாக்கடை, ஆழம் இல்லாததால் கழிவுநீர் தினமும் வீடுகளுக்குள் பெருக்கெடுக்கிறது. இதை ஆழப்படுத்த மாநகராட்சியிடம் கடிதம் அளித்துள்ளேன். ரயில்வே பாலத்தின் கீழ் சுரங்கப்பாதை அமைத்து தருமாறு, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்திடம் முறையிட்டு வருகிறேன். கலெக்டரிடமும் மனு அளித்துள்ளேன். n துாய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தயாராக உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்திடம் நடவடிக்கை எடுக்க மனு அளித்துள்ளேன். n பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.16.80 லட்சத்தில் கழிப்பறைகளும், ரூ.1.40 கோடியில் மாணவர்களுக்கு, 10 வகுப்பறைகள், ரூ.60 லட்சத்தில் 'ஸ்மார்ட் கிளாஸ்', ரூ.40 லட்சத்தில் கூட்டரங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. n 15 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த சமுதாயக்கூடம் ரூ.12.60 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு திறப்பு விழா காண உள்ளது. n பயனீர் மில் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரூ.80 லட்சத்தில், 24 மணி நேரமும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்கும் வசதி, ரூ.28 லட்சத்தில் ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. n வி.கே. ரோடு தண்ணீர் தொட்டி அருகே ரூ.2.25 கோடியில் ஆதரவற்றோர் தங்கும் விடுதி முடியும் தருவாயில் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை