உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு எச்சரிக்கை:ஒரே நாளில் இரண்டு பேர் பலி

பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு எச்சரிக்கை:ஒரே நாளில் இரண்டு பேர் பலி

பெ.நா.பாளையம்;தென்மேற்கு பருவ மழை துவங்கி உள்ளதால், மலையோர கிராமங்களில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கடந்த வாரம், ஒரே நாளில் இருவர் பாம்பு கடிக்கு பலியாகினர்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சின்னதடாகம் அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த கலாமணி,48, வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கிற போது, கட்டுவிரியன் பாம்பு கடித்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார்.

இனப்பெருக்க காலம்

பெரியநாயக்கன்பாளையம் அருகே செல்வபுரம் விவசாயி சிவசுப்பிரமணியம்,67, ஆட்டுக்கு இலை பறித்துக் கொண்டிருந்தபோது, கண்ணாடி விரியன் பாம்பு கடித்து, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.இது குறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்,' பருவ மழை துவங்கியதை அடுத்து மலையோர கிராமங்களில் பாம்புகள் அதிக அளவில் வெளிப்படும். மேலும், தற்போது பாம்புகளின் இனப்பெருக்க காலம் என்பதால், அவைகளின் நடமாட்டமும் அதிகம். இது தொடர்பாக மலையோர கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் வீடுகளை சுற்றி உள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், என்றனர்.இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை முன்னாள் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சேரலாதன் கூறியதாவது:

ஒரே மாதிரியான ஊசி

தமிழக அரசு மருத்துவமனைகளில் நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் விஷ பாம்புகள் கடித்தால், சிகிச்சை அளிக்க உரிய ஊசி மருந்துகள் உள்ளன. மேற்கண்ட மூன்று பாம்புகளுக்கும் ஒரே மாதிரியான ஊசி போதுமானது. விஷப் பாம்புகள் கடித்தால் குறிப்பிட்ட அரசு மருத்துவமனையில் குறைந்த பட்சம் எட்டு ஊசிகளாவது கட்டாயம் இருக்க வேண்டும். பாம்பு கடிபட்ட நபர் வந்தவுடன் அவரது உடலில் விஷம் ஏறி இருக்கிறதா, இல்லையா என்பதை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.பாம்பு கடிபட்ட நபர், தன்னுடன் கடித்த பாம்பை எடுத்து வந்தால், அடையாளம் கண்டு, அதற்குரிய சிகிச்சை அளிக்கலாம். இல்லாவிட்டால் கடிபட்ட நபர் அளிக்கும் தகவலின் அடிப்படையில் மருத்துவம் மேற்கொள்ளப்படும்.விஷம் இல்லாத பாம்புகள் கடித்தால், குறிப்பிட்ட நபருக்கு விஷ பாம்புக்கடிக்கான மருந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண மருந்து கொடுத்தால் போதுமானது.நாகப்பாம்பு கடித்தால், மனித நரம்பு மண்டலத்தை பாதிக்கும். கண்ணாடி விரியன், கட்டுவிரியன் பாம்புகள் கடித்தால் சிறுநீரகத்தை பாதிக்கும். பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தை பாதிப்பதால், கடிபட்டவர் தூங்கக் கூடாது.சிலருக்கு கடிபட்ட இடத்திலிருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டே இருக்கும். சிறுநீர் கழித்தால் ரத்தம் கலந்து வரும். அவர்களுக்கு பாம்பு கடி மருந்து கொடுத்தால் மட்டும் போதாது, சிறுநீரகத்தை சுத்தம் செய்ய 'டயாலிசிஸ்' செய்ய வேண்டும். ரத்தம் உறைவதற்கான மருந்தும் அளிக்க வேண்டும். முக்கியமாக பாம்பு கடிபட்டவர்கள் உடனடி சிகிச்சைக்கு மருத்துவமனையை நாட வேண்டியது கட்டாயம். பாம்பு கடிபட்ட இடத்தில் பிளேடால், கத்தியால் கீறக்கூடாது. காயத்தை சுற்றிலும் இறுக கட்டக் கூடாது. காயம் பட்ட இடத்தில் வாய் வைத்து உறிஞ்சக் கூடாது. பாம்பு கடிபட்ட நபர்களை நடந்து செல்ல அனுமதிக்க கூடாது. சைக்கிள் ஓட்ட, இருசக்கர வாகனம் இயக்க அனுமதிக்க கூடாது. பாம்பு கடிபட்டவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை அணுகுவது அவசியம். இவ்வாறு, டாக்டர் சேரலாதன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ