உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பி.ஏ.பி., திட்டத்தில் அரசாணைப்படி பாசனத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும்! முற்றுகை போராட்டத்தில் வலியுறுத்தல்

 பி.ஏ.பி., திட்டத்தில் அரசாணைப்படி பாசனத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும்! முற்றுகை போராட்டத்தில் வலியுறுத்தல்

பொள்ளாச்சி: 'பி.ஏ.பி. நான்காம் மண்டலத்தில், ஐந்தாவது சுற்று தண்ணீரை குறைக்காமல் அரசாணைப்படி வழங்க வேண்டும்,' என வலியுறுத்தி விவசாயிகள், கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு பாசனத்துக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது, நான்காம் மண்டல பாசனத்தில் நான்காவது சுற்று நீர் வினியோகம் நிறைவடைந்த நிலையில், ஐந்தாவது சுற்று தண்ணீர் வழங்கும் நாட்களை குறைத்து இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து, வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொள்ளாச்சி பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அனுமதி மறுப்பு பொள்ளாச்சி பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகளை, போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.அதனால், அதிகாரிகளை சந்தித்து நியாயம் கேட்க வந்துள்ளோம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் குறிப்பிட்ட நபர்களை மட்டும் அனுமதிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, குறிப்பிட்ட நபர்கள் மட்டும் நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தினர். விவசாயிகள் கூறியதாவது: ஐந்தாவது சுற்றில் வழங்கப்படும் நீர், ஏழு நாட்களுக்கு பதிலாக, நான்கு நாட்கள், ஐந்து நாட்களுக்கு பதிலாக, மூன்று நாட்களாக குறைத்து வழங்கப்படும் என தகவல் பரவியது.அரசாணையின்படி நீர் வழங்காமல் நாட்களை ஏன் குறைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்தோம். போலீசார், அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்பட்டது. அதில், கோரிக்கையை மனுவாக கொடுக்கவும், உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மனு அளிக்கப்பட்டது. காத்திருப்பு போராட்டத்துக்கு வர இருந்த பாசன சபை தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்தனர். இதுபோன்ற சம்பவங்களை கண்டிக்கிறோம். அரசாணைப்படி தண்ணீர் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கருத்து மட்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி